மிடல், வலி. தபவெனக் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. புடையல், மாலை. குருதி புடையலும் கழலும் சிவப்பப் பனிற்றும் என்க. “பனிற்றுதல் தூவுதல்” என்றுரைத்து, “பனிற்றுவது புண்பட்ட வீரருடல் எனக் கொள்க” என்பர் பழையவுரைகாரர். எனவே மறவர் மிடல் தபுதலால், புண்பட்ட அவருடல் குருதியைத் தெறித்துத் தூவுமென்பது கருத்தாயிற்று. களமென்றது கங்கையிடைச் சேரியென்புழிப் போலப் பாசறைமேல் நின்றது. இதுகாறும் கூறியது, “விறலி, புரவெதிர் கொள்வனைத் தழிஞ்சி பாடிக் கண்டனம் வரற்குச் செல்லாமோ ; அப் புரவெதிர் கொள்வனாகிய கோமான் இதுபொழுது தான் அவ் வெதிர்கோடற் கேற்பப் புலவுக் களத்தோன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும். “வரற்குச் சொல்லாமோ எனக் கூட்ட வேண்டுதலின் மாறாயிற்” றென்றும், “இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்போடு அவன் கொடைச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். 8. ஏவிளங்கு தடக்கை |