6. கரைவாய்ப் பருதி
    

46.இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமி ரவிர்தொடி செறித்த முன்கைத்
திறல்விடு திருமணி யிலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர்
 
5தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப்
பணியா மரபி னுழிஞை பாட
இனிதுபுறந் தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலிற்
சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி
ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப்
 
10பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக்
கோடுநரல் பௌவங் கலங்க வேலிட்
டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய
வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர்
செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே.
 

இதுவுமது.
 
பெயர்   : கரைவாய்ப் பருதி.

1 - 7. இழையர்.........சுரத்தலின். 

உரை : இழையர் குழையர் நறுந் தண் மாலையர் -இழையினையும்
குழையினையும் நறிய தண்ணிய மாலையினையும் ; சுடர் நிமிர் அவிர்
தொடி  செறித்த  முன்  கை - ஒளி மிக்கு விளங்குகின்ற தொடியைச்
செறிய  அணிந்த  முன்  கையினையும்; திறல் விடு திருமணி - மிக்க
வொளி  திகழும்  அழகிய  மணி மாலை கிடந்து; இலங்கு மார்பின் -
விளங்குகின்ற   மார்பினையுமுடைய;  வண்டுபடு  கூந்தல்  -  வண்டு
மொய்க்கும்  கூந்தலை  ;  முடி  புனை  மகளிர்  -  கொண்டையாக
முடித்துக்  கைசெய்து கொண்டுள்ள பாடல் மகளிர் ; தொடைபடு பேர்
யாழ்  -  நரம்புத்  தொடையினையுடைய  பேரியாழின்கண்  ; பாலை
பண்ணி - பாலைப் பண்ணையமைத்து; பணியா மரபின் உழிஞை பாட
- பகைவர்க்குப் பணியாத முறைமையினையுடைய உழிஞைத் திணைச்
செயலைப்  புகழ்ந்து  பாட  ; இனிது புறந் தந்து -அவர்களை நன்கு
ஓம்பி  ;  அவர்க்கு  இன்  மகிழ்  சுரத்தலின்  - அவர்கட்கு இனிய
மகிழ்ச்சியினைத் தன் கொடையாலும் முகமலர்ச்சியாலும் செய்தலாலே
எ - று.
  

இழையரும்    குழையரும் மாலையரும் ஆகிய மகளிர் பாட என
இயையும்.   முன்  கையினையும்  மார்பினையுமுடைய  மகளிர்  என
முடிக்க.