துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : வரைபோ லிஞ்சி. 5 - 9. பசும் பிசிர் ............ வேந்தே. உரை: பசும்பிசிர் ஒள்ளழல் - பசிய பொறிகளையுடைய ஒள்ளிய நெருப்பானது ; ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு - ஞாயிறு பலவாய்த் தோன்றும் மாயத் தோற்றங்கொண்டு சுடர்விட்டு எங்கணும் விளங்க ; ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட - உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச் செய்வதுடன் முழக்கத்தைச் செய்து திரியும் கூற்றினது இயல்பினைக் கொண்ட ; கடுந் திறல் - மிக்க திறலோடு ; துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே - போர்த்துறை பலவற்றினும் சிறப்பமைந்த வெற்றியையுடைய அரசே எ - று. |