இனிப் பழையவுரைகாரர், “ஆரெயில் தோட்டி வௌவி, அதனையுடைய கழுவுள் தலைமடங்குகையாலே வேறு புலம் படர்ந்து, அவ்வேறு புலத்து நினக்கு யானையொடு அருங்கலம் திறையிடார்தம் விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றதெனக் கருதித் தங்கள் மெய்ந்நடுக்கமிக்கு நின்னை அணங்கெனக் கருதிப் பலபடப் பரவுதலான், பேய் தான் பற்றினாருயிரை வௌவாது தனக்கு அவர் பலியிட்டுழி அப் பலி கொண்டு பெயருமாறுபோல, நீயும் அவருயிரை வௌவாது திறை கொண்டு பெயரா நின்றாய் ; இஃதன்றே நீ இதுபொழுது செய்கின்றது ; நின்னை யுடற்றியோர் கடுந்தேறு உறுகிளை துஞ்சும் கூடு கிளைத்த இளந்துணை மகாரைப்போல, பெருமானே ; அலந்தார்கள் ; இனிமேல் உள்ளத்து உரவரையும் மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்ெ்தண்ணி, அவர்களிடத்துச் செய்யும் அருளறிந்து அருளாயாயின், நெடுந்தகாய், இவண் வாழ்பவர் யார்? நின்னூழி வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க”, என்றும், “இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறி அவற்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தவாறாயிற்” றென்றும் கூறுவர். 2. உருத்தெழு வெள்ளம் |