“நன்றுபெரி துடையையால்” என்றும் கூறினார். நன்று பெரி தென்பன,ஒரு பொருட் பன்மொழி. வலம்படு வென்றியாலும் கோடாக் கொள்கையாலும் குன்றா வளனும் இன்பவாழ்வு முறையே பயனாய் விளைந்து உலகத்தவர்க்கு ஆக்கமும் இன்பமும் உளவாக்கலின், “உலகத்தோர்க்கு” என்றார். குவ்வுருபு, பொருட்டு. உலகத்தோர் பொருட்டு நீ இவ்விரண்டினையும் நன்று பெரிது உடையை யாதலால், வாழ்க நின் வளனே நின்னுடைய வாழ்க்கை யென இயைத்துக் கொள்க. இதுகாறுங் கூறியது, செயிர்தீர் செம்மால், வாய்மொழியாளர் நின் புகழேத்த, நின் வளனும் நின்னுடைய வாழ்க்கையும் வாழ்க; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும், மன்னெயில் எறிந்து மறவரைத் தந்து நின்னிழல் வாழ்நர்க் கொப்பக் கோடற வைத்த கோடாக் கொள்கையுமாகிய இரண்டையும், வெந்திறல் வேந்தே, நீ நன்று பெரிதுடையை யாதலால், இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின்னுடை வாழ்க்கையும் நின் வளனும் வாழ்க என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “செம்மால், துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மன்னெயில்களை யெறிந்து அவற்றில் வாழும் மறவர்களைப் பிடித்துக்கொண்டு பழைதான நிலைமைச் சிறப்பினையுடைய நின் நிழலில் வாழும் வீரர்க்குக் கொடுமை யறும்படி வைத்த பிறழாக் கொள்கையும் நீ மிகப் பெரி துடையையா யிராநின்றாய்; ஆதலால், வேந்தே, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின் செல்வமும் நின் வாழ்நாளும் வாழ்வனவாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவற்குள்ள குணங்களை யெல்லாம் எடுத்துப் புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாறாயிற்று.” 8. பரிசிலர் வெறுக்கை |