பான்மை சொல்லாலும் செயலாலும் புலப்படுதலால், அவ் விரண்டனையும் எடுத்தோதினார். பகர்தல், ஒன்று கொடுத்து ஒன்று வாங்குதல்; ஆகவே, பகைவர் திறை கொடுத்து அருள்பெறுமாறு பெற்றாம்; திறை பெறாது அருளுதல் கழிகண்ணோட்ட மென்னும் குற்றமா மென வறிக. பகைவர்பால் செலுத்தும் நின் அருட் பெருமைக்கு அவர்தம் உயிரல்லது திறை ஆற்றாதாயினும், அருள்செய்தற்பொருட்டு, திறைகொள் வாயாயினை யென்பார், “கொள்ளுநை” யென்றார். கொள்ளுநை, அடுநை, விடுநை (புறம். 36) என்றாற் போல்வதோர் முற்றுவினைத் திரிசொல். வலம்படு வியன்பணையை ஆடுநர் பலிதூஉய்ப் பரவ, கடிப்புக் கண்ணுறும் இயவர், பைஞ்ஞிலம் வருக இந் நிழலென வெண்குடை நுவலும் மார்ப, வேந்தே, பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை யாதலின், புரைவது நினைப்பின் புரைவதோ இன்று என வினைமுடிவு செய்க. “இதனாற் சொல்லியது பொறையுடைமையொடு படுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று”. 8. கூந்தல் விறலியர் |