உவமமாக்கி யுரைக்க”  என்றும், “ஞாயிறு    தோன்றியாங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த என முடிக்க” என்றும் கூறுவர்.

“ஆதலின்     என்பதனை  மழையினும்  பெரும்  பயம் பொழிதி
என்பதனோடு   கூட்டி,   நின்னூ   ரிடத்து   அவ்வயின்   ஆனாக்
கொள்கையையாய்ப்  போந்தபடியாலே  ஈண்டு  நின்  பாசறையிடத்து
மழையினும்  பெரும்பயம் பொழியா நின்றாய் என வுரைக்க” என்றும்,
“பசியுடை  யொக்கலை அப் பசியை யொருவிய எனப் பசி வருவிக்க”
என்றும் கூறுவர் பழைய வுரைகாரர்.

இதுகாறும்     கூறியதனால்,   முரசினையும்   கொற்றத்தினையும்
பூணினையுமுடைய வேந்தர் பலர்தாம் உளர் ; அவராற் பெறும் பயன்
இல்லை  ;  அந்தணர்  அருங்கலம்  ஏற்ப,  நீர்பட்டு இருஞ்சே றாடி
களிறுநிலை   முணைஇய   மணல்மலி  முற்றத்தை  யுடைய தாரருந்
தகைப்பி லிருந்து கொண்டு, வயிரியர் புறஞ்சிறை வரக்காணின் வல்லே
புரவியும்  பாண்டிலும்  இழையணிந்தீமென   ஆனாக் கொள்கையை ;
மேலும்,  ஞாயிறு  தோன்றிப்  பன்  மீன்  ஒளி கெடுத்தாங்குச் சேரர்
குடியில்  தோன்றி  மாற்றார் உறு முரண் சிதைத்த அண்ணலே ; அக்
கொள்கையை   யாதலால்,  மழையினும்  பெரும்  பயம்  பொழிதி  ;
அதனால்,  தோன்றலே, நின் பாசறைக்கண்ணே, நின் தாள் வாழ்த்திக்
காண்கு  வந்திசின்  என  வினை  முடிவு  செய்து கொள்க. காண்கு :
தன்மை  வினைமுற்று  ; “செய்கென் கிளவி வினையொடு முடியினும்,
அவ்  வியறிரியா  தென்மனார்  புலவர்”  (வினை.  7)  என்பதனால்,
வந்திசின் என்னும் வினைகொண்டு முடிந்தது.

இனிப் பழைய வுரைகாரர், “உலகத்து வேந்தர் பலருளர் ; அவராற்
பெறும் பயன் என் ; தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர் காணின் ஈமென
அவ்வயின்  ஆனாக்  கொள்கையை  யாதலின்,  மழையினும் பெரும்
பயம் பொழிதி ; அதனால், அண்ணல், தோன்றல், பசியுடை யொக்கல்
ஒரீஇய  பாசறையானே, நின் நோன்றாள் வாழ்த்திக் காண்கு வந்திசின்
என  மாறிக்  கூட்டி  வினை  முடிவு  செய்க”  என்றும்,  “அதனால்
என்பதன்பின்   அண்ணல்   தோன்றல்   என்னும்  விளிகள்  நிற்க
வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் கூறுவர்.

“இதனாற்   சொல்லியது ; அவன்  கொடைச்சிறப்பினை வென்றிச்
சிறப்பொடு படுத்துக் கூறியவாறாயிற்று”.

இனி, பழைய வுரைகாரர் காலத்தே ஈய என்றொரு பாடமுண்டாகக்
கண்டு,   “ஈயவென்றது   பாடமாயின்,  உரைசா  லென்றது  கூனாம்”
என்றும்,  “உரைசால்,  வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல
மேற்ப வீய நீர்பட்டென்று பாடமாக வேண்டும்” என்றும் கூறுவர்.

5. நாண்மகி ழிருக்கை
 

65.எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பின
பரியுடை நன்மா விரியுளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும