அறிவுடையராயின் பணிந்து திறை பகரும் பண்பு மேற்கொள்வர் ; அஃதின்மையின் உடன்று மேல்வந்தன ரென்பார், “மடம் பெருமையின்” என்றும், அதனால் அவர் தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழலுற்றா ரென்றற்கு “மெய்ம்மறந்த வாழ்ச்சி” யென்றும் கூறினார். நிலையில்லாத மெய்யை நிலையாகக் கருதாது அதனை மறந்து நிலைத்த புகழை விரும்பி மாய்தலால் உண்டாகும் துறக்கவாழ்வு, மெய்ம்மறந்த வாழ்ச்சி யாயிற்று என வறிக. இவ்வாழ்வு கருதிப் போர்க்களத்தில் வேந்தரும் வீரரும் பொருது மடிதலால், “வீந்துகு போர்க்களம்” என்றார் . இனிப் பழைய வுரைகாரர், “வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்றது மாற்று வேந்தர் அஞ்சித் தம் மெய்யை மறந்த வாழ்வென்றவா” றென்றும், “வாழ்ச்சி மெய்ம் மறத்தல் காரணமாக அதன் காரியமாய் வந்ததாகலான், மெய்ம்மறந்த வென்னும் பெயரெச்சம் நிலமுதற் பெயர் ஆறுமன்றிக் காரியப் பெயரென வேறோர் பெயர் கொண்டதெனப்படும்” என்றும், “வாழ்வு வெற்றிச் செல்வ” மென்றும், “வாழ்ச்சிக் களமெனக் கூட்டுக” என்றும், “இச் சிறப்பானே இதற்கு வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, முரசம் துவைப்ப வாளுயர்த்து இலங்கும் பூணனாய்ப் பொலங்கொடி யுழிஞையனாய்ப் போர்க்களத்து ஆடும்கோ, வியலுளாங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லானல்லன், அவன் கண்ணி வாழ்க என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. 7. சில்வளை விறலி |