இதுகாறுங்  கூறியவாற்றால், பகல் நீடாகாது இரவுப்பொழுது பெருகி
நின்ற மாசித் திங்களிலே, பாண்மக னுவப்ப, புல்லிருள் விடிய, புலம்ப
அகல,   பாயிருள்   நீங்க,   பல்கதிர்  பரப்பி,  ஞாயிறு  குணமுதல்
தோன்றியாங்கு  சிறுகுடி  பெருக,  உலகந்  தாங்கிய,  குடக்கிற் சேரர்
குடியில்  தோன்றி மேம்பட்ட கற்பினையுடைய  மெய்ம்மறை, செல்வர்
செல்வ,  சேர்ந்தோர்க் கரணம், பண்ணியம் பகுக்கும் ஆறு முட்டுறாது
அறம்  புரிந்த  பணைத்  தோளையுடைய நினக்கு நாடு புறந்தருதலும்
கடனாதலால், அறியாது எதிர்ந்து குறையுற்றுப் பணிந்து பகைவர் திறை
தருபவாயின்,  சினம்  தணிவாயாக  ;  அதனால் நின் கண்ணி வாழ்க
என்று  முடிக்க.  பழையவுரைகாரர்,  “வில்லோர் மெய்ம்மறை, செல்வ,
சேர்ந்தோர்க் கரணம், நின்தோட் கேற்ற நன்கலங்களைத் திறை தரும்
நாடுகளைப்  புறந்தருதல்  நின் கடனாயிருக்குமாகலான், நின் பகைவர்
அறியாதெதிர்ந்து  துப்பிற்  குறையுற்றுப்  பணிந்து திறை தருவராயின்
சினம் செலத்தணிமோ, நின் கண்ணி வாழ்க என மாறிக் கூட்டி வினை
முடிவு   செய்க”  என்றும்,  “நாடு  புறந்தருதல்  நினக்குமார்  கடன்
என்பதன்   பின்   சினஞ்   செலத்   தணிமோ  என்பதைக்  கூட்ட
வேண்டுதலின், மாறாயிற்” றென்றும் கூறுவர்.

“இதனாற் சொல்லியது அவன் வென்றிச்  சிறப்புக் கூறியவாறாயிற்று”.

10. மரம்படு தீங்கனி.
 

60.கொலைவினை மேவற்றுத் தானை தானே
இகல்வினை மேவலன் றண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியாது
 
5அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்
மறாஅ விளையு ளறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடை மறவர்
 
10பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
வருங்கட லூதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே.
 

துறை : விறலியாற்றுப் படை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : மரம்படு தீங்கனி.