பொருட்டு. இனிப் பழையவுரைகாரர், “உறை போதல், உறைவிட முடியா தொழித” லென்றும், “அளவை விரிய வெனத் திரிக்க” என்றும் கூறுவர். ஆரநிறைத்துக் கொடுக்கும் பதம் ஆர்பதம் எனப்பட்டது. “நெல்லின் ஆர்பதம் என இருபெயரொட்டு” என்பர் பழைய வுரைகாரர். அறிந்தோ ரென்பது சொல்லெச்சம். இதுகாறும் கூறியது, பேரியாழ் பாலைபண்ணிப் படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல, திருமணி பெறூஉம் நாடு கிழவோன், ஒன்னார் சமம் ததைய நூறி, அவர் தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப ; அவ் வள்ளியோனைப் பாடுவோமாக என வினைமுடிவு செய்க. இனிப் பழைய வுரைகாரர், “அவனை நினைத்துச் செல்லும் முதுவாயிரவலனே, நின் நினைவிற்கேற்ப நாடு கிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று கொடுப்பதின்றி, ஒன்னார் பிணம் பயிலழுவத்துத் திறையாகத் தந்த களிற்றொடு தன்னாட்டு விளைந்த நெல்லாகிய உணவினைக் கொடா நின்றானென்று எல்லாரும் சொல்லுவார்களாதலால், அவன்பால் ஏகெனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். என்பவர், பாணைனை அவன்பால் ஏகென்பது பாணாற்றுப்படையாம் ; இது பாடாண் பாட்டாதலின் ஆறறிந்து செல்லும் பாணனொடு சேரன் கொடை நலம் கூறிப் பாடுவதே ஈண்டைக்குப் பொருந்துவதென வறிக. “இதனாற் சொல்லியது ; அவன் வென்றிச் சிறப்பொடு படுத்துக் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”. “படர்ந்தணை செல்லும் என்று பாணன் தன்னில் நினைவன கூறினமையின், துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப் பாடாணாயிற்று”. அவ்வாறாயின் வினை முடிபு, “ஆதலால், நெஞ்சே, அவன்பால் செல்வாயாக” எனக் கூட்டி முடித்தல் வேண்டு மென்க. 7. வெண்போழ்க் கண்ணி |