அறம்புரி செங்கோலனாகிய சேரலாதன் நாட்டில் மழை பொய்க்குவதின்மை தோன்ற, “பொய்க்குவ தாயினும்” என்றும், நச்சியடைந்தோர் நசை பழுதாகாது நச்சியவாறே நல்கும் நலம் தோன்ற, “நசை பொய்யலன்” என்றும் கூறினார். பாண் மக்கள், கள் உண்மின்; அடுமின்; எறிக; ஏற்றுமின்; கூந்தல் விறலியர் அடுப்பு வழங்குக; பெற்றது உதவுமின்; தப்பின்று; சேரலாதன், மாரி பொய்க்குவதாயினும், பின்னும் நசை பொய்யலன் என்று வினைமுடிவு செய்க. சேரலாதனது கொடைச் சிறப்பையே எடுத்தோதினமையின், இஃது இயன்மொழி வாழ்த்தாயிற்று. அடிபிறழாது அளவடியானியன்ற நேரிசையாசிரியப்பா வாகலின், ஒழுகுவண்ணமும் செந்தூக்கு மாயிற்று. 9. வளனறு பைதிரம் |