கடற்போர் செய்து பெற்ற வென்றியைப் பாராட்டிப் பாடி யாடி மகிழ்வது குறித்து, கோடியர்க்கு அக்கடலிற் போந்த குதிரைகளையே வழங்கினா னென்றற்கு, கடலிற் புணரியொடு, உறழ்ந்து கூறினார் போலும். “நீரி்ன் வந்து நிமிர்பரிப் புரவியும்” (பட்டினப். 185) என்று சான்றோர் கூறுதலால், கடற்கப்பாலுள்ள நாடுகளிலிருந்து கலங்களிற் குதிரைகள் கொணரப்பட்டமை யறியலாம். இனி, பழையவுரைகாரர், “மன்னர் ஏத்தக் களிறூர்ந்து என முடித்து அதனைக் களிறூர வெனத் திரித்து மூய வென்னும் வினையொடு முடிக்க” என்பர். எனவே, “முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்” என்பதைப் பெயராக்கி, காண்பவர் களிற்றினை யூர, தேரொடு சுற்றம் உலகுடன் மூய என்றுரைக்குமாறு பெறுதும். இதுகாறும் கூறியது. பெரும, கணவ, குட்டுவ, வலம் தரீஇ, மகிழ்சுரந்து பொழிந்தவையாகிய கலிமா எண்ணின், முந்துவினையெதிர்வரப் பெறுதல் காணியர், நின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய, களிறூர்ந்து செல்லும் மைந்தரொடு மன்ன ரேத்த, நீ பிறக்கோட்டிய தெண்கடற் பௌவத்து வரூஉம் புணரியிற் பலவாம் என்பதாம். “இதனாற் சொல்லியது ; அவன் கொடைச் சிறப்பும் வென்றிச்சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.” 3. ஏறா வேணி |