மாராயம் பெற்ற புகழ்மிக்க சுற்றத்தா ரென்றற்கு, “நெடுமொழி யொக்கல்” என்றார். “மாராயம் பெற்ற நெடுமொழி” (தொல். புறத். 8) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. மாராயம் பெற்றதனால் உலகவர் மீக்கூறும் புகழ் “நெடுமொழி” யெனப்பட்டது. கொடுமணம், பந்தர் என்ற இரண்டும் அக்காலத்தே முறையே நன்கலங்கட்கும் உயரிய முத்துக்கட்கும் சீரிய இடங்களாகத் திகழ்ந்தன போலும். “கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (பதிற். 74) என அரிசில் கிழாரும் ஓதுதல் காண்க. இதனால், “தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை” யெனப் பொதுப்படக் கூறினாராயினும், கொடுமணம் பட்ட நன்கலமும், பந்தர்ப் பெயரிய மூதூர்ப் பட்ட தென்கடன் முத்தும் பெறுகுவை யென இயைத்துக் கொள்க. இதுகாறும் கூறியது, கொன்றை வெண்போழ்க் கண்ணியரும், யாக்கையரும், பல்செருக் கொன்று, மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோருமாகிய வீரர்க்குப் பெருமகனும், நேரிப் பொருநனும் ஆகிய செல்வக் கோமானைப் பாடினை செலின், கடனறி மரபின் கைவல் பாண, நீ நின் நெடுமொழி யொக்கலொடு கொடுமணம் பட்ட நன்கலனும் பந்தர் மூதூர்ப்பட்ட தென்கடல் முத்தும் பெறுகுவை யென்று வினைமுடிபு கொள்க. இனிப் பழையவுரைகாரர், “பந்தர்ப் பெயரிய மூதூர்த் தென்கடல் முத்தமொடு கொடுமணம் பட்ட நன்கலம் பெறுகுவை யென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது ; அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று”. 8. ஏமவாழ்க்கை |