துறை : தும்பையரவம். வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : பஃறோற் றொழுதி. 1 - 5. கார்மழை...........................காணுமோர்க்கே. உரை : கார் மழை முன்பின் - கரிய முகிற் கூட்டத்தின் முன்னே; கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடுவரி பொற்ப - ஒழுங்கு குலைந்தெழும் வெள்ளிய சிறகுகளையுடைய கொக்குகளின் நீண்ட வரிசையைப்போல ; கொல் களிறுமிடைந்த பல் தோல் தொழுதியொடு - யானைப் படையுடனே செறிந்த பலவாகிய கிடுகுப் படையுடன்; நெடுந்தேர் நுடங்கு கொடி அவிர் வரப் பொலிந்து நின் செலவு - நெடிய தேரிற் கட்டியசையும் கொடிகள் விளங்க அழகுற்றுப் பகைமேற் செல்லும் நின் செலவு; காணுமோர்க்குப் பெரிது இனிது - காண்போர்க்கு மிக்க இன்பந் தருவதாம் எ - று. முன்பின், ஈண்டு முன்னே யென்னும் பொருட்டு. கைபரிதல் என்புழி, கை, ஒழுங்கு. கைபரிதலாவது ஒழுங்கு குலைதலென்றே பழையவுரையும் கூறுகிறது. மழை முகிலின் முன்னே கொக்குகள் ஒழுங்கு குலைந்து எழுந்து நீளப் பறக்கும் நேரிய தோற்றம், போர் யானைகளோடு மிடைந்து வரும் கிடுகுப் படையோடு தேரிற் கட்டிய கொடி யசைந்துவரும் காட்சிக்கு உவமமாயிற்று. ஒழுங்கு குலைந்து செல்லினும், அவற்றின் நேரிய தோற்றம் கரு முகிற் படலத்திட்ட வரிபோலத் தோன்றுவது பற்றி, “நெடுவரி” யென்றார். கருமுகிற் படலத்திற் றோன்றும் மேகவடுக்குப் போலக் களிறு மிடைந்த கிடுகுப் படையின் தொழுதி தோற்றுமாறு உணர்க. இம் மழைத் தோற்றம்
1. பன்மா என்றும் பாட வேறுபாடுண்டு |