வன்மையுடைமைபற்றிக் கூற்றுவனை, “உரும்பில் கூற்ற” மென்றும் குறித்தார். நாட்டிற்கு மூதூரும், வயவர்க்குக் கூற்றமும் உவமம் கூறலின், கூற்றுவனை யேவல் கொள்ளும் சேரனது வலிமிகுதி குறிப்பால் உணர்த்தினாராயிற்று. “உரும்பில் கூற்றென்பது பிறிதொன்றால் நலிவுபட்டு மனக்கொதிப்பில்லாத கூற்ற மென்றவாறு; உருப்பென்னும் ஒற்று மெலிந்து நின்றது” என்பர் பழையவுரைகாரர். படையழிந்து மாறினார் மேலும் மகளிர் மேலும் பிற பொரற்காகாதார்மேலும் படையெடாச் சீர்மை யுடைமைபற்றி வயவரைத் “திருந்துதொழில் வயவர்” என்றார். சீறிய-சீறிய வதனால் அழிந்த வெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. காடு நிலந் தெரியாவண்ணம் பசுந் தழையும் முள்ளும் மண்டிமாவும் மாக்களும் இனிது வழங்காவாறு வருத்தம் செய்வது போல, நெருஞ்சியும் பச்சிலையுங் முள்ளும் மண்டி மக்கள் இனிது நடந்து செல்லவொண்ணாதபடி வருத்தும் இயல்பு கொண்டுள்ள திறத்தினைவிதந்தோதிய சிறப்பால் இப் பாட்டிற்குக் “காடுறு கடுநெறி” யென்பது பெயராயிற்று. “நெருஞ்சியின் அடர்ச்சியை நெருஞ்சிக் காடெனக் கூறிய அடைச்சிறப்பால் இதற்குக் காடுறு கடுநெறி யென்று பெயராயிற்று” என்பர் பழையவுரைகாரர். இதுகாறும் கூறியது வேந்தே நீ சிறிய நாடுகள் மக்கள் கண்பனி மலிர்நிறை தாங்கி வலமின் றம்ம, காலையது பண்பெனக் கைபுடையூஉ மெலிவுடை நெஞ்சினராய்ச் சிறுமை கூர, நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய; பண்டு அறியுநர் அவற்றின் செழுவளம் நினைப்பின், தேர்பரந்த புலம் ஏர்பரவா நலமும், களிறாடிய புலம் நாஞ்சிலாடா நலமும் மத்து ரறியமனை இன்னியம் இமிழா நலுமும் நெஞ்சிற் றோன்றி நோதக வரும்; யான் நோகு என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “நின் வயவர் சீறிய நாடு அவ் வயவர் சீறுதற்கு முன்பு இருக்கும்படி சொல்லின், தேர்பரந்த புலம் ஏர் பரவா, களிறாடிய புலம் நாஞ்சி லாடா, மத்து ரறியமனை இன்னியம் இமிழா, அவ்வாறு வளவியது இப்பொழுது காடுறு கடுநெறியை யுடைத்தாகாநின்றது; அதன் செழுவளத்தைப் பண்டு நற்கறியுநர் நினைப்பின் நோதக வரும்; நோவேன் யான் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” வென்பர். இதன்கண் நின் வயவர் சீறிய நாடு இவ்வாறு அழிந்த தென எடுத்துச் செலவனை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று; தேர் பரந்த என்பது முதலாக மூன்றடி வஞ்சியடியாக வந்தமையால் வஞ்சித்தூக்கு மாயிற்று; ஆங்கு என்பது அடிமுதற் கூன். “சீர்கூ னாதல் நேரடிக் குறித்தே” (தொல். செய். 49) என்பவாகலின், நேரடி முதற்கண் வந்தது. இப் பாட்டால் சேரனது வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. 7. தொடர்ந்த குவளை |