இனி, “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல். பொ. 75) என்ற சூத்திரத்து, “ஐவகை மரபின் அரசர் பக்கமும்” என்பதற்கு இப் பாட்டினைக் காட்டி, இதன்கண் அரசன் “ஓதியவாறும் வேட்டவாறும் காண்க” என்றும், “வடக்கொடு சிவணிய வகைமையான” (பொ. 86) என்ற சூத்திரவுரையில், “மிதியற் செருப்பிற் பூழியர் கோவே.....அயிரைப் பொருந” என்ற இது, “மலை யடுத்தது” என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மண்படு மார்பன், மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருநன் என அரசன் சிறப்பும், “மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு, கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்” என்பது முதலாகத் தேவியின் சிறப்பும் பாடி “ஆயிர வெள்ளம் வாழிய பலவே” யென வாழ்த்தலின், இது செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று 2. கயிறுகுறு முகவை |