தோன்றுமாதலின், அதனடியில் வீழ்ந்த பொருள் தோன்றுதலரிதன்றோ; இவ்வானி யாற்றுநீர் அத்துணை ஆழமுடைத்தாயினும், பளிங்குபோல் தன்னகத்துப் பட்ட பொருளை இனிது புலப்படுத்து மென்பார், “பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்” என்றார். மகளிர் புனலிற் பாய்ந்தாடுமிடத்து அவர் காதிற் செறிக்கப்பட்டிருக்கும் குழை வீழ்தல் இயல்பு ; “வண்டலாயமொ டுண்டுறைத் தலைஇப புனலாடு மகளிரிட்ட பொலங்குழை” (பெரும்பாண். 311 - 2) என்று பிறரும் கூறுதல் காண்க. வானியாறு நீலகிரியில் தோன்றிச் சந்தனமரம் செறிந்த காட்டு வழியாக வருதலின், “சாந்துவரு வானி” யென்றார். அதன் நீர் மிக்க தட்பமுடைய தென்பது அது காவிரியொடு கலக்கு மிடத்தே இக் காலத்தும் இனிது காணலாம். சாயற்கு நீரை யுவமம் கூறுவது, “நெடுவரைக்கோடுதோறிழிதரும், நீரினும் இனிய சாயற் பாரிவேள்” (புறம். 105) என வரும் கபிலர் பாட்டாலும் அறியலாம். இனிப் பழையவுரைகாரர், “வருவானி யென்றது வினைத்தொகை” யென்றும், வானி யென்பது ஓர் யாறு” என்றும் கூறுவர். இதுகாறுங் கூறியவாற்றால், “இளஞ்சேர லிரும்பொறையையெல்லாரும் வெந்திறற் றடக்கை வென்வேற் பொறையன் என்றலின், யான் வெருவி, வெப்புடையாடூஉ என்று முன்பெல்லாம் நினைந்து அஞ்சினேன் ; அஃது இப்போ தொழிந்தது ; அவன் நல்லிசை நிலைஇய, இல்லோர் புன்கண் தீர நல்கும் புரவலன்; அண்ணல்; வானி நீரினும் தீந்தண் சாயலன்” என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், “இளஞ்சேர லிரும்பொறையை எல்லாரும் வெருவரச் செருக்களம் புலவக் கொன்றமர்க்கடந்த தடக்கைப் பொறைய னென்று சொல்லுகையாலே யான் அவனை வெப்ப முடையானொரு மகனென்று முன்பு கருதினேன் ; அஃது இப்பொழுது கழிந்தது; அப் பொறையனாகிய பாடுநர் புரவலன் ஆடுநடை யண்ணல்; யான் தன்னொடு கலந்திருந்தவழித் தன்னாட்டு வானியாற்று நீரினும் சாயலனாயிருந்தான்றான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது அவன் வன்மை மென்மைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 7. வெண்டலைச் செம்புனல் |