இதுகாறுங் கூறியது, நீ தேரோட்டிச் சென்றதனால், பிறர் அகன்றலை நாடுகள், நாஞ்சிலாடா. வளம் பரப்பறியா, எயில் தோட்டிவையா, கடுநெறி பெரும்பாழாக மன்னிய வென்பதாம். பழையவுரைகாரர், “நீ தேரோட்டிய பிறர் நாடு அழிந்தவாறு சொல்லின், நாடு நின் மா வழங்கின வயல் பின்பு கலப்பை வழங்கா; நின் யானையினம் பரந்த வயல் பின் செல்வம் பரத்தலையறியா, நின் படையாளர் சேர்ந்த மன்றம் கழுதையாலுழப்பட, நீ உடன்ற அரசர்தம் நகரிகள் பின்பு தமக்கு அரணாகக் காவலாளரை வைக்கப்படா; இவ்வாறு அழிந்தபடியேயன்றிச் சில்லிடங்கள் கடுங்கா லொற்றலின், அழலாடிய மருங்கினையுடைய கானுணங்கு கடுநெறியினையும் முனைகளையுமுடைய அகன்ற பெரும் பாழாக நின்றன வெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இதன்கண் தேரும் கொடியும் முரசும் விதந்தோதி, மாவாலும் களிற்றாலும் படைவீரராலும் பகைவர் நாடுகள் அழிந்த திறத்தை விளக்கிக் கூறுதலின், அடுத்தூர்ந் தட்ட கொற்றமாயிற்று. இவ்வாறு பல துறையும் விரவிவரத் தொடுத்தமையின், இப் பாட்டு வஞ்சித்துறைப் பாடாணாயிற்று, “தேரோட்டிய பிறர் நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணாயிற்” றென்பது பழையவுரை. “மாவாடிய வென்பது முதலாக மூன்றும் வஞ்சியடியாக வந்தமையால் வஞ்சித்தூக்கு மாயிற்று. நின் படைஞர் எனவும், நீ யெனவும் அடிமுதற்கட் சீரும் அசையும் கூனாய் வந்தன.” இப் பாட்டினாற் சொல்லியது: சேரமானது வென்றிச சிறப்பென்பது கூறியவாறாயிற்று. 6. காடுறு கடுநெறி |