கள்ளை நிறைப்பதும் வழங்குவதும் ஒருங்கு நிகழ்தல் பற்றி, “நிறைந்து நெடிதிராத் தசும்பு” என்றார். பழையவுரைகாரரும், “உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து நெடும்பொழுதிராத வென்றவாறு” என்றார். தசும்பினை இவ்வாறு சிறப்பித்தவர், அதனிடத்துள்ள கள் உண்ண உண்ணக் குறைபடாது நிரப்பப்பட்டமை தோன்ற, “வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின்” என்று சிறப்பித்தார். புகையொடும் சினம் தவிராது தவாக் கள்ளின் என இயையும். போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ, தொலையாக் கற்ப, வண்கை வேந்தே, நின்கலி மகிழின்கண் நின்நிலை கண்டேம் என மாறிக்கூட்டிக் கொள்க. “வேந்தே யென்னும் விளி முன்னின்ற விளிகளோடு கூடுதலின் மாறாயிற்று. இதனாற் சொல்லியது அவன் செல்வ மகிழ்ச்சி கூறியவாறாயிற்று. 4. நோய்தபு நோன்றொடை |