5. நாடுகா ணெடுவரை
 

85.நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
 
5முன்றினை முதல்வர் போல நின்று
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய
 
10மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வூரினும் பலவே.
 

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : நாடுகா ணெடுவரை.

1 - 4. நன்மரம்...............தம்மென.

உரை :  நல்மரம்   துவன்றிய  நாடு பல தரீஇ - நல்ல மரங்கள்
செறிந்த  நாடுகள்  பலவற்றையும்  வென்று  தந்து  ; பொன் அவிர்
புனைசெயல்  இலங்கும்  பெரும்பூண்  -  பொன்னாலியன்ற அழகிய
வேலைப்பாடமைந்து  விளங்கும்  பேரணிகலன்களையும்  ; ஒன்னாப்
பூட்கை  - நம்மொடு  பொருந்தாது பகைத்த மேற்கோளையுமுடைய ;
சென்னியர்    பெருமான்    -    சோழர்களுக்குத்   தலைவனான
வேந்தனையும்  பற்றி  ; முத்தை தம்மென - என் முன்னே கொண்டு
தருவீராக  என்று  நீ நின் தானை வீரர்க்குச் சொன்னது கேட்டதும் ;
இட்ட வெள்  வேல் - சோழனுடைய படைவீரர் தோல்விக் குறியாகக்
கீழே எறிந்த வேல்கள் எ - று.
  

தத்தமக்குரிய பருவத்தே தப்பாது பழுத்து நல்ல பயன் கொடுக்கும்
மரங்களென்றற்கு,    “நன்மரம்”    என்றார்.   நன்மரம்  துவன்றிய
நாடெனவே,    எல்லார்க்கும்   பயன்படும்   வளன்மிக   வுடைமை
கூறியவாறாயிற்று.     சோழவேந்தன்     தன்னொடு     பகைத்துக்
கொண்டதனால்       பொருந்தானாயினும்       பொன்னானியன்ற
பேரணிகலன்களை யுடையனாதலை  யறிந்து கூறுவான், “பொன்னவிர்
புனைசெயல்  இலங்கும்  பெரும்பூண்”  என்றான். என்றது,  இவ்வாறு
அவன் பொற்பணி பூணுதற்குரியனே யன்றிப் போருடற்றி