அறாஅ யாணரால் பண்பட்டு, சிறந்த வளஞ் சுரந்த நாடுகள் இற்றைப்போதில் மக்கள் அனைவரும் வேறுநாடுகட் ககன்றமையின் வழக்கொழிந்தன வென்பார், “வழங்குந ரற்றென” என்றும், அதனால் வழிகள் ஒதுக்கிடமின்றி யாண்டும் புல்லும் முட்புதலும் செறிந்து எம் மருங்கும் மூடிக்கொண்டன வென்பார், “புல்மிக்கு மருங்கு கெடத்தூர்ந்து” என்றும் குறித்தார். “பெருங்கவின் இழந்த ஆற்ற” எனவே, முன்பு அவ்வழியிடங்கள் முழுதும் நறும் புனலும் தண்ணிழலும் பொருந்திய பழகுடையவாயிருந்தனவென்றும், புல் மிக்குள்ளவிடம் நெல் மிக்கும், வழங்குந ரற்ற வழி எனவே, இடையறவின்றி மக்கள் வழங்கும் வழக்கு மிகுந்தும் விளங்கினவென்றும் கொள்ளப்படும். கணவரொடு கூடிக் கற்புக் கடம்பூண்ட மகளிர் இருந்த அவ்விடங்களிலே ஏற்றொடு கூடிய மரையா இனி துறையாநிற்கு மென்பார், “ஏறுபுணர்ந் தண்ணல் மரையா அமர்ந்தினி துறையும்” என்றார்; மரையா, காட்டுப்பசு; “மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை” (மலைபடு. 331) என்றாற்போல. இனி, மான் பிணையென்று கொள்வாருமுண்டு. வானளாவ உயர்ந்த நெடுநிலை மாடங்கள் நின்ற அந் நாடுகள் இப்போது காடாயினவென்றலின், “விண்ணுயர் வைப்பின காடாயின” என்றார். இனிப் பழையவுரைகாரர், “விண்ணுயர் வைப்பின காடென்றது, மரங்கள் விண்ணிலே செல்ல வோங்கி நிற்கும் காடுகளாயின வென்றவா” றென்பர். இதுகாறுங் கூறியது பெருவறங் கூர்ந்து புலங்கெடு காலையும் வயிரிய மாக்கள் உண்டு மலிந்தாடப் பெருங்கலம் வீசும் குட்டுவ, காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய அடைகரைக்கண் நாரையும் செவ்வரியும் உகளும் படப்பையில் தாமரையும் வளைமகள் குறாது மலர்ந்த ஆம்பலும் அறாயாணருமுடைய அகன்றலை நாடுகள் பெருங்கவின் இழந்த ஆற்றவாய், காடாயின; அவற்றை நின் நயந்து வருவேம் கண்டனம் என்பதாம். இனி, பழையவுரைகாரர், “குட்டுவ, போரெதிர் வேந்தர் தாரழிந்தொராலின், அவர் அகன்றலை நாடு காடாயின; அதனை நின் னயந்து வருவேம் கண்டனம் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது : அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் நாடு காடாயினவென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடா ணாயிற்று.” 4. சீர்சால் வெள்ளி |