யொன்றே நிலைபெற்று நிற்கு மென்றா ராயிற்று, “இந்திர ரமிழ்தம் இயைவதாயினும், இனிதெனத் தமிய ருண்டலு மிலரே” யென்றும், “அன்னமாட்சி யனைய ராகித், தமக்கென முயலா நோன்றாட், பிறர்க்கென முயலுநருண்மை யானே” யென்றும் “உண்டா லம்ம வுலகம்” என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாட்டு (புறம். 182) ஈண்டுக் கருதத் தக்கது. இதுகாறுங் கூறியது, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், சேரலர் வேந்தே, பரிசில் வெறுக்கை, பாணர் நாளவை, வாணுதல் கணவ, மள்ளரேறே, வசையில் செல்வ, வான வரம்ப, தாவில் நெஞ்சத்தால் பகுத்தூண் தொகுத்த ஆண்மையால் நீ பிறர்க்கென வாழ்தியாகலான், உலகத்தோர் செல்வர் பலர்மன்; அவரெல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “வான வரம்ப, செல்வர் உலகத்தார் பலர்மன்; அச் செல்வத்தாரெல்லாம் பெற்றது ஈதெனத் தாவில் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மையானே பிறர்க்கென வாழ்தி நீ யாகலான் அவரெல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது; அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று” 9. ஏவல்வியன் பணை |