பாண்டில் முழுதும் பரவி வழிதலின், “உராலின்” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “சொரிசுரை கவரும் என்றது, நெய்யைச் சொரியும் உள்ளுப்புடை யுண்டாயிருக்கின்ற திரிக்குழாய் தான் ஏற்றுக்கொண்ட நெய்யென்றவாறு” என்றும், “சுரை யென்றது தி்ரிக்குழாய்க்கு ஆகுபெய” ரென்றும் கூறுவர். கூத்தும் குரவையும் விழவும் நடக்குந்தோறும் நாட்டரசனை வாழ்த்துவதும் அவன் புகழோதிப் பாராட்டுதலும் மரபாதலின், “உரை யானா” என்றார். சிலப் - குரவைகள் காண்க. விறலியராவார் விறல்படப் பாடி யாடும் மகளிர் என்ப. அம் மகளிர் ஆடல்பாடல்களோடு அழகும் நன்கு பெற்றவர் என்றற்கு “நன்னுதல் விறலியர்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “நன்னுதல் விறலியரென்றது, தமது ஆடல் பாடற்கேற்ப நூலுட் சொல்லப்பட்ட அழகையுமுடையா ரென்றவாறு” என்றும், “அவ்வழகினை நுதல் மேலிட்டுக் கூறியவாற்றான் இதற்கு நன்னுதல் விறலிய ரென்று பெயராயிற்” றென்றும் “நெய் வழிபு உராலின் சுடரழல ஆடும் என்றதனால் சொல்லியது அந்த நகரிகளது செல்வ முடைமை” யென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, குட்டுவன் அட்டு ஆனான், அடுதொறும் பரிசிலர் களிறு பெற்று ஆனார்; தொன்னகர் வரைப்புக்களில் அவன் உரை ஆனா என்று கூட்டி வினை முடிவு செய்க. 8. பேரெழில் வாழ்க்கை |