மைந்தர் மாறு நிலை தேய, சமம் ததைய, ஆர்ப்பெழ, அரைசுபடக் கடக்கும் ஆற்றலாற் புரைசான்ற மைந்த, நீ நி்ன் தானையை, மா வூர்ந்தும், தேர்மிசை யேறியும், யானை யெருத்தத் திருந்தும், நிலத்திடை நின்றும் ஆங்காங்கு நின்று பொரும் சான்றோர்க்கு மெய்ம்மறையாய் நின்று ஓம்புகின்றா யாதலால், அறுவையராகிய பகைவர் நின்னை ஒரூஉப என முடிக்க. வேந்தர்களைச் சான்றோர் மெய்ம்மறை (பதிற். 14:12) என்பதும் இக் கருத்தே பற்றியென வறிக. போர் குறித்து மேல் வருவோர்க்கும் அவரை எதிரூன்றுவோர்க்கும் ஒருவர்க் கொருவரது வலி நிலைகெடச் செய்வது போர்க்களத் துட்கோளாதலின், “மாறா மைந்தர் மாறுநிலை தேய” எனப் பொதுப்படக் கூறினார். ததைதல், நெருங்குதல். அரைசுபடக் கடக்கும் ஆற்றலுடைய வேந்தர்க்கு உயர்வு உண்டாதல் ஒருதலையாதலின் “ஆற்றற் புரைசால் மைந்த” என்றார். குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை, காலாட்படை எனப் படை நால்வகைத்தாதலின், அந் நால்வகை யிடத்தும் உண்டாகும் தளர்ச்சியினைப் போக்குவான் பிற தானைத் தலைவரை யேவாது தானே நேரிற் சென்று ஓம்புதலை, மாவூர்ந்தும் தேரிவர்ந்தும் யானை யேறியும் நிலத்து நின்றும், “நீ ஓம்பன் மாறே” என்றார். பழையவுரைகாரரும், “மாவூர்ந்து அரைசுபடக் கடக்கும் ஆற்றலையுடைய புரைசால் மைந்த, அவ் வாற்றலிடத்து வரும் குறைகளுக்குப் பிறரை யேவாது அவற்றை நீயே பாதுகாத்துச் செய்தலால் ஒரூஉப அறுவையர்” என்பர். இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவா றாயிற்று. “மாற்றாநாடு கோடன் முதலாயின வன்றி வென்றி கோடலே கூறினமையால் துறை தும்பையாய், ஒரூஉப வெனப் படையெழுச்சி மாத்திரமே கூறினமையான், அதனுள் அரவமாயிற்று. தும்பையாவது, “மைந்து பொருளாக வந்த வேந்தனைச், சென்று தலையழிக்கும் சிறப்பிற்றென்ப” (தொல். புறத். 15) என்றார் ஆசிரியர் தொல்காப்பியர். பகைவரை மாறா மைந்தர் என்றது, மைந்து பொருளாக வந்தவாறாயிற்று; அரைசுபடக் கடக்கும் ஆற்றலால் மாவூர்தல் முதலியவற்றால் ஓம்புதல் சென்று தலையழித்தலாயிற்று. “செவ் வுளைய” வென்பது முதலாக இரண்டும் வஞ்சியடியாய் வந்தமையான் வஞ்சித்தூக்கு மாயிற்று. 5. மெய்யாடு பறந்தலை. |