அவர் செய்தற்குரியன இவை யென்பார், “ஆடுக விறலியர்” என்றும், “பாடுக பரிசிலர்” என்றும் கூறினார். இதுகாறும் கூறியது, நாடு கிழவோன் வயவர் பெருமக னென்றும், சான்றோர் மெய்ம்மறை யென்றும், வானவரம்ப னென்றும் அறிந்தோர் கூறுப ; அவனைக் கண்டு வியக்கும் நீவிர் ஆடுக, பாடுக என வினை முடிவு செய்து கொள்க. இனி, “வயவர் பெருமகன், சான்றோர் மெய்ம்மறையாகிய வான வரம்பனைப் புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் தம் கொழுவழி மருங்கின் திருமணி பெறும் நாடுகிழவோன் என்று சொல்லுவார்கள்; அவன் அவ்வாறு செல்வக் குறையிலனாதலான், அத் தரத்திற்கேற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன்; வந்தமைக்கேற்ப விறலியராயுள்ளீர், ஆடலைக் குறையறச் செலுத்துமின் ; பரிசிலராயுள்ளீர் நீயிரும் நும் கவிகளைப் பாடிக் கைவரப் பண்ணுமின் என்று மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “வானவரம்பன், நாடு கிழவோன் எனக்கூட்ட வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். “இதனாற் சொல்லியது அவனாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவன் கொடையும் கூறியவாறாயிற்று. ஆடுக பாடுக வென்றதற்கு அவன்பாற் சென்று ஆடுக பாடுக வெனக் கூறாது. இவ்வாறு கூறியதன் கருத்து, ஆற்றுப்படை யென்னாது செந்துறைப் பாடாணென்று கிளந்தமையானெனக் கொள்க,” என்பதும் பழையவுரை. 9. மாகூர் திங்கள் |