துறை : காட்சி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : புலாஅம்பாசறை. 1 - 8. பலாஅம் ................. பாரி உரை : பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் - பலாமரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பிலிருந்தொழுகும் தேனை; வாடை துரக்கும் - வாடைக்காற்று எறியும் ; நாடு கெழு பெருவிறல் - பறம்பு நாட்டிற் பொருந்திய பெரிய விறல் படைத்தவனும் ; ஓவத் தன்ன வினை புனை நல்லில் - ஓவியத்தில் எழுதியது போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும் ; பாவை யன்ன நல்லோள் கணவன் - பாவை போன்ற நல்ல அழகும் நலமும் உடையாட்குக் கணவனும் ; பொன்னின் அன்ன பூவின் சிறியிலை - பொன் போலும் நிறமுடைய பூவினையும் |