திருஞெமரகலத்துப் பாயல் என்பதற்குப் பழையவுரைகாரர், “அகலப் பாயல் என இருபெயரொட்டாக்கி, அத்தை அல்வழிச் சாரியை யென்க; துயில் இனிய பாயல் என வுரைக்க” என்றும், “அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான், இதற்கு, துயிலின் பாயல் என்று பெயராயிற்று” என்றும் கூறுவர். அகலத்தைப் பாயலெனச் சிறப்பித்தல், “மலர்ந்த மார்பிற் பாயல்” “சாயல்மார்பிற் பாயல்” எனப் பயில வழங்கும் வழக்கால் அறிக. இனி, திருவீற்றிருக்கும் அவன் மார்பிடத்தே, அதுகுறித்துப் புலவாது, தம் புரையால், திருவின் இருப்பு ஆள்வினை யாடவர்க்கு அழகென்று தேறி, அம்மார்பிற் கிடந்து பெறும் பாயலே இனிதாம் எனக் கருதி விழையப்படும் சிறப்பு நோக்கித் “துயிலின் பாயல்” என்று சிறப்பித்தமையின், இதற்குத் “துயிலின் பாயல்” என்பது பெயராயிற்றெனினும் ஆம். துயில்வார்க்கு ஊற்றின்பம் பயந்து மென்மையுற்று நிலவுவதால், அவன் மார்பினைச் “சாயல் மார்பு” என்றார். “ஊரன் மார்பே, பனித்துயில் செய்யும் இன்சா யற்றே” (ஐங். 14) என்றும் “யாம் முயங்குதொறு முயங்கு தொறு முயங்க முகந்துகொண், டடக்குவ மன்றோ தோழி,.......நாடன் சாயல் மார்பே” (அகம். 328) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. பாசறைக்கண் நீ நீடினையாதலின் நின்னைக் காணவந்தேன்; நின் தேவியாகிய அசைநடை, நின்னை நினைத்தலும் உரியள்; தோன்றல், வல்லோய், நின் மார்பு நனி யலைக்கின்றதாதலால், அவள் பாயல் உள்ளாள்; ஆதலால், நீ விரைந்து சென்று அவளை அடைக என வினைமுடிவு செய்துகொள்க. ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம். இதனாற் சொல்லியது : அவன் வெற்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று. 7. வலம்படு வியன்பணை |