என்பது   குறிப்பு.  எனவே,   வேந்தன்   நாடோறும்  போர்வேட்டு
வினைபுரிதலையே மேற்கொண்டிருந்தமை பெற்றாம்.

இதுகாறும் கூறியது ; அணங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும் மார்ப,
நின்  தாணிழல் வாழ்வோர், கட்டூர் நாப்பண், முரசம் அதிர, உண்ணா
தடுக்கியபொழுது    பல   கழியவும்,   இன்னார்   உறையுள்   தாம்
பெறினல்லது,  அல்கலும்  பெரிதமர்ந்து,  வடபுலவாழ்நரின் இன்னகை
மேய  பல்லுறை,  பெறுபகொல்லோ  ;  பெறுதல் அரிது போலும் என
வினைமுடிவு   செய்க.   இனிப்   பழையவுரைகாரர்,   “அரிவையர்ப்
பிணிக்கும் மணம் கமழ் மார்ப, நின் தாள்நிழலோர் உண்ணா தடுக்கிய
பொழுது  பல கழிய இன்னார் உறையுள் தாம் பெறினன்றி, இன்னகை
அல்கலும்  மேய பல்லுறை பெறுப கொல்? பெறார் ; அவர் அவ்வாறு
அது   பெறினன்றி   நின்  மார்பாற்  பிணிக்கப்பட்ட  அரிவையரும்
இன்னகை  அல்கலும்  மேய  பல்லுறை  பெறுவது ஏது எனக் கூட்டி
வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது ; காம வேட்கையின் ஓடாத அவன் வென்றி
வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”.

9. மண்கெழு ஞாலம்
 

69.மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக்
கடல்போ றானைக் கடுங்குரன் முரசம்
காலுறு கடலிற் கடிய வுரற
 
5எறிந்துசிதைந்த வாள்
இலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
 
10கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல், அசைவில் கொள்கைய ராகலி னசையாது
ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
 
15விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.