7. வலம்படு வென்றி
 

37.வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின்புக ழேத்தப்
1பகைவ ராரப் பழங்க ணருளி
நகைவ ரார நன்கலஞ் சிதறி
 
5ஆன்றவிந் தடங்கிய 2செயிர்தீர் செம்மால்
வான்றோய் நல்லிசை யுலகமொ டுயிர்ப்பத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து
மன்னெயி லெறிந்து மறவர்த் தரீஇத்
 
10தொன்னிலைச் சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்குக்
கோடற வைத்த கோடாக் கொள்கையும்
நன்றுபெரி துடையையா னீயே
வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே.
 
  

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : வலம்படுவென்றி.

1 - 5. வாழ்க............செம்மால்.

உரை :   பகைவர்  ஆரப்  பழங்கண்  அருளி  -  பகைவர்க்கு
நிரம்பவும்  துன்பத்தைச்  செய்து;  நகைவர்  ஆர  நன்கலம் சிதறி -
பாணர்  முதலாயினார்க்கு   நிரம்பவும்  நல்ல  கலன்களை  வழங்கி;
ஆன்று  அவிந்து  அடங்கிய செயிர்தீர் செம்மால் - நற்குணங்களால்
நிறைந்து  பணிய  வேண்டுமுயர்ந்தோ  ரிடத்துப்  பணிந்து ஐம்புலனு
மடங்கிய  குற்றமில்லாத  தலைவனே; வாய்மொழி  வாயர் நின் புகழ்
ஏத்த  -  வாய்மையே  யுரைக்கும்  சான்றோர் நின்னுடைய புகழைப்
பரவ; நின் வளன் - நின்னுடைய பெருவளனும்; நின்னுடை வாழ்க்கை
வாழ்க  - நின்னுடைய இன்ப வாழ்வும் நிலைபெற்று வாழ்வன வாகுக
எ - று.
  

“பீடின்     மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச், செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாத”   (புறம்.   148)   நாவினையுடைய   சான்றோர்  என்றற்கு,
“வாய்மொழி  வாயர்” என்றார். வாய்மை யமைந்த மொழி, வாய்மொழி
யெனவந்தது.    வாய்மை    யன்றிப்    பிறசொற்களைப்   பயிலாத
சிறப்புக்குறித்து,   “வாயர்”   என்றார்.   ஏத்தல்,  உயர்த்துக்  கூறல்.
புலவரையும் பாணரையும் கூத்தரையும்
  


1.பகைவராயினும். பா. வே 2.செயிர்தீர் செம்மல் - பா. வே