மிகுமழை போல மிகத்தரப்படுவதுபற்றி, “சேறுபடு மாரியின்” என்றா ரென்றும் கொள்க. அழுகைச் சுவைக்குரிய பண்ணுறுப்பை, “பையுளுறுப்” பென்றார் ; பையுள் அழுகையால் மெய்ப்படுதலின், இனிப் பழையவுரைகாரர், “தீந்தொடை பாலைக் கோவைகளாகிய வீக்குநிலை” யென்றும், “பையுளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்கு அளிக்கும் நனையெனக்கூட்டி எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினையுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்து வாசிக்குமாறு போலே ஒன்றையொன்றொவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக் கொடுக்கும் பலதிறத்து மது வெனவுரைக்க” என்றும், “நனை யென்றது, ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப்பெயராய் நின்ற” தென்றும், “மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கு மிகுதிக் குவமம்” என்றும், “சாறுபடு திருவினென்ற வுவமம் அம்மதுக்களைப் பானம் பண்ணுங் காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையும் முதலாய பொருள்களுக் குவமம்” என்றும் ; “சாறு என்றது விழாவின் றன்மையை” யென்றும், மகிழ் என்றது மகிழ்ச்சியையுடைய ஓலக்க இருப்பினை” யென்றும் கூறுவர் . “இருந்த வூர்தொறு நல்யாழ்ப் பண்ணுப் பெயர்த் தன்னகாவும் பள்ளியும்” (மலைபடு 450-1) எனப் பிறரும் கூறுவது காணத்தக்கது. “அவன் ஓலக்க இருக்கையின் செல்வத்தை நாண்மகி ழிருக்கையெனக் கூறிய சொற்சிறப்பானே இதற்கு நாண்மகி ழிருக்கையென்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர். இதுகாறும் கூறியது, வயவர் பெரும; வில்லோர் மெய்ம்மறை, சேர்ந்தோர் செல்வ, சேயிழை, கணவ, புரவல, வெறுக்கை மார்ப, பாலை வல்லோன் பண்ணுப் பெயர்த்தாங்கு, மாரியின் அளிக்கும் நனை மகிழின்கண், நின் நாண்மகி ழிருக்கையை இனிது கண்டிகும் என வினை முடிவு செய்க. இனிப் பழைய வுரைகாரர், “மார்ப, நின் நாண் மகிழிருக்கையின் சிறப்பெல்லாம் நின் நனை மகிழின்கண்ணே இனிது கண்டேம் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்று கூறுவர். “இதனாற் சொல்லியது ; அவன் ஓலக்க வினோதத்தோடு படுத்து அவன் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று. 6. புதல் சூழ் பறவை |