வள்ளன்மையும் உயிர் புரத்தலும் சிறப்ப வுடைமைபற்றி, சேரலாதற்கு மழை முகிலை யுவமை கூறலுற்று, அது மழையினைப் பெய்து பின்னர் வெள்ளிய பிசிராய்ப் பறந்து கழிதல் போல, உவமைப் பொருளாகிய சேரலாதன் கழிதலாகாது என பரிகரித்தற்கு, “பெய்து புறந் தந்து பொங்கலாடி, விண்டிச் சேர்ந்த வெண்மழை போலச், சென்றறாலியரோ பெரும” என்றார். பெய்தோய்ந்த முகில் வெள்ளிய பிசிராய்க் கழியு மென்பதனை, “பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன, துவலை” (அகம். 217) என்றும், “எவ்வாயும், தன் தொழில் வாய்ந்த இன்குரலெழிலி, தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு” (நற். 153) என்றும் சான்றோர் கூறுமாற்றானறிக. சென்றாலியரோ என்பதே பாடமாயின், சென்றறாலியர் எனற்பாலது சென்றாலியர் எனத் திரிந்ததெனக் கூறிக் கொள்க. இனிப் பழையவுரைகாரர் “பொங்கலாடி யென்றது எஃகின பஞ்சு போல வெளுத்துப் பொங்கி யெழுதலைச் செய்து என்றவா” றென்றும், “வெண்மழை போலச் சென்றறாலிய ரென்றது அம் மழை பெய்து புறந்தரும் கூற்றை யொத்து அது பெய்து வெண்மழையாகக் கழியுங் கூற்றை யொவ்வாது கழிகவென்றவாறென்றும் கூறுவர். நீடுவரை யடுக்கம் என்புழி “அடுக்கம் ஈண்டு அடுக்குத” லென்றும், “மழையை அவன் றன்னோடுவமியாது அவன் நாளோடு உவமித்தது, அவனோடு அவன் நாளுக்குள்ள ஒற்றுமை பற்றி யென்க” வென்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, ஆன்றோள் கணவ, சான்றோர் புரவல, கொற்றவ, பொருந, மழவர் மெய்ம்மறை, கோவே, அண்ணல், தோன்றல், பெரும, குருசில், நின் நயந்து வந்தனென், நின் நாள் வெண்மழை போலச் சென்றறாலியரோ எனக் கூட்டி முடிக்க. “இதனாற் சொல்லியது, அவன் உலகுபுரத்தலும் தன் குறையும் கூறி வாழ்த்தியவாறாயிற்று.” 6. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி |