துறை : களவழி வண்ணமும் தூக்கும் அது. பெயர் : வாண்மயங்கு கடுந்தார். 1 - 2. வீயா............வயவே. உரை : வீயா யாணர் - ஒழியாத புது வருவாயினையுடைய; நின் வயின் - நின்னிடத்தே; மலிபெறு வயவு - மிகுதி பெற்ற வலியானது; தாவா தாகும் - கெடாது நிலைபெறுவதாகும் எ - று. வலி நிலைபெற்றது காரணமாகச் சேரமான் செய்த போர்த்திறத்தைப் பின்னர்க் கூறுகின்றா ராதலின், முன்னர், “தாவா தாகும் மலிபெறு வயவே” யென்றார். மலி பெறு வயவினை வீயா யாணரால் நன்குணருமாறு தோன்ற, அதனை முன்னே யெடுத்து மொழிந்தார். மலிதல், மிகுதல். வய வென்னும் உரிச்சொல் பெயராயிற்று. 3 - 4. மல்லல்...............தலைச்சென்று. உரை : மல்லல் உள்ளமொடு - வெற்றிவளம் சிறந்த மனவெழுச்சியால்; செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று - போரில் மேம்பட்ட வலி பொருந்திய வீரர்களுடனே கூடிச் சென்று; |