வெற்றியினை விரியக் கூறினாரென வறிக. அரசு என்பது உயர்திணைப் பொருண்மைக்கண் வந்த அஃறிணைச் சொல்லாதலின், அதுபோலவே, மன்னென்பதும் உயர்திணைப் பொருட்டாகிய “அஃறிணைப் பெயராக்கி” மீக்கூறு மென்பதனோடு முடிக்க வெனப் பழைய வுரைகாரர் கூறினர்; “உயர்திணை மருங்கின் நிலையின வாயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கியலும்” (தொல்.சொல் :56) என்பது விதி. மறந்தபக் கடந்து (25) முழங்குபணை செய்த (14) என மாறிக் கூட்டுக. இங்ஙனம் மாறாது எருத்த மேல் கொண்டு (19) என்னும் வினையொடு மாறி முடிப்பாரு முளர் என்பது பழையவுரை. ஆரியமன்னரை மறந் தபக் கடந்த செய்திக்குப் பின்பே கடம்பெறிந்து முரசு செய்த செய்தி நிகழ்தலின், எவ்வழிக் கூட்டினும் பொருள் நலம் குன்றாமை யறிக. சேரலாத (16), கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு (6), யானை (18) யெருத்த மேல்கொண்டு பொலிந்த நின் (19) பலர்புகழ் செல்வம் கண்டிகும் (20) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் வெற்றிச் செல்வச்சிறப்புக் கூறியவாறாயிற் றென்பது பழையவுரை. செவ்வேள் கடல் புகுந்து சூருடை முழுமுதல் தடிந்து களிறூர்ந்தது போலச் சேரலாதனும் கடல்புகுந்து கடம்பு முதல் தடிந்து யானையெருத்தம் மேல்கொண்டு பொலிந்ததும், ஆரியமன்னர் மறந்தபக் கடந்ததும் கூறியது அவன் வெற்றிச் சிறப்பு; “நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகும்” என்பது செல்வச்சிறப்பு. 2. மறம்வீங்கு பல்புகழ் |