சினங்கெழு குரிசில், நின் களிறு குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணின் தாங்கலாகா; ஆகலான், வளையினும் பிறிதாறு சென்மதி என இயைக்க. இனிப் பழையவுரைகாரர், குழூஉநிலைப் புதவென்றது, பல நிலமாகச் செய்த கோபுரவாயி லென்றும், தே மென்றது தேனீயென்றும், கடாம், மதில் கண்டுழிப் போர்வேட்கையாற் பிறக்கும் மதமெனவும் கூறுவர். இதுகாறும் கூறியது, சினங்கெழு குரிசில், நீ, கலம் தரீஇயர் வேண்டுபுலத்து இறுத்து, அவர் நல்கினை யாகுமதி யெம்மென்று, திறை கொடுப்ப, அருளி, நின் மூதூர்ச் செல்குவையாயின், வாயினும் அகழியும் புரிசையு முடையதாகிய இதோ நின் முன்னே நிற்கும் இவ்வெயில், நின்னிற்றந்த மன்னருடைய எயிலாகும் ; அல்லதும், நின் முன்னோரோம்பிய எயிலுமாகும் ; இதற்குள்ளே நின் தானையினைப் படுத்தல் யாவதாம் ; வளையினும் பிறிதாறு செல்மதி ; வேங்கை வென்ற நின் களிறு, புதவிற் கதவு மெய் காணின், ஆங்குத் தாங்கலாகா வாகலான் என வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “நீ வேண்டு புலத்திறுத்து, அவர் திறை கொடுப்ப அருளி நின் மூதூர்ச் செல்குவையாயின் குருசில், வளையினும் பிறிதாறு சென்மதி ; செல்லுதற்கு யாது காரணமெனின், புதவிற் கதவு மெய் காணின், ஆங்கு நின் களிறு தாங்கலாகா. தாங்க வேண்டுவ தேல், நின்னிற்றந்த எயின்முகத்துப் படுத்துவதல்லது நின் முன்னோரோம்பிய எயின்முகத்துப் படுத்தல் யாவது என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்றும், “செல்குவை யாயின் என்பதன்பின் பிறிதாறு சென்மதி யென்பதனையும் தாங்கலாகா வாங்கு நின் களிறு என்பதன் பின் எயின்முகப்படுத்தல் யாவது என்பதனையும் கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று” என்றும் முடிப்பர். இதனாற் சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடுபடுத்து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. 4. நில்லாத் தானை |