இதனாற்     சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச்
சிறப்பும்  உடன்  கூறி  வாழ்த்தியவா  றாயிற்றென்பது பழையவுரைக்
கருத்து.
  

9. துவராக் கூந்தல்
 

89.வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப்
புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப்
பழனுங் கிழங்கு மிசையற வறியாது
 
5பல்லா னன்னிரை புல்லருந் துகளப்
பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற்
பெரும்பல் யாணர்க் கூலங் கெழும
நன்பல் லூழி நடுவுநின் றொழுகப்
பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின்
 
10நாளி னாளி னாடுதொழு தேத்த
உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்
டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது
 
15கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத்
தகர நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின்
 
20வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே .
 
  

துறை : காவன் முல்லை.
வண்ணமும் தூக்கு மது.
பெயர் : துவராக் கூந்தல் .

1 - 8. வானம்......................ஒழுக .

உரை :  வானம் பொழுதொடு சுரப்ப - மழை உரிய  காலத்திலே
தப்பாது  பொழிய  ; கானம் தோடுறு மடமான் ஏறு புணர்ந்து இயல -
காட்டிடத்தே  தொகுதிகொண்ட மடப்பம் பொருந்திய பிணைமான்கள்
தத்தம் ஆணொடுகூடி இனிது செல்ல ; புள்ளும் மிஞிறும்  மாச்சினை