பக்கம் எண் :

பரிபாடல்- வையை194


72 - 79: காரொவ்வா....................................பொலங்கல மேற்ப

      (இ - ள்.) வையை கார்வேனில் கலங்கித் தெளிவரல் -
வையையே! இவ்வாறு கார்காலத்திலே கலங்கி வேனிற்காலத்தே
தெளிதலானே, நீர் ஒவ்வா நினக்கு - உனக்கு இந்நீர்மை எப்பொழுதும்
ஒத்திருக்கின்றதில்லை, கார்வானம் கனைக்கும் அதிர்குரல் நீங்க -
கார்ப்பருவத்து முகில்கள் முழங்காநின்ற திசைகள் அதிர்வதற்குக்
காரணமான இடியொலி நீங்காநிற்ப, பனி படு பைதல் விதலைப் பருவத்து
- பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப்
பருவத்தின்கண், ஞாயிறு காயா நளி பினமாரிக் குளத்து - ஞாயிற்று
மண்டிலம் சுடுதலில்லாத குளிர்ந்த கடைமாரியையுடைய
மார்கழித்திங்களில், மா இருந் திங்கள் மறுநிறை ஆதிரை - மிகப் பெரிய
திங்கள் மண்டிலம் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து நிறைந்த
திருவாதிரை நாளின்கண், விரிநூல் அந்தணர் விழவுதொடங்க - விரிந்த
மெய்ந்நூல்களையுணர்ந்த அறவோர் அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய
இறைவனுக்குத் திருவிழாவைத் தொடங்காநிற்ப, புரிநூல் அந்தணர்
பொலங்கலம் ஏந்த - முப்புரியாகிய பூணூலையுடைய பார்ப்பனர்
அவ் விழவின்கண் இறைவனுக்குப் பலிப்பொருள் பெய்த
பொற்கலங்களையும் பிறவற்றையும் ஏந்தாநிற்ப;

      (வி - ம்.) கார் கலங்கி வேனில் தெளிவரல் நீர் நினக்கு ஒவ்வா
எனக் கூட்டுக. நீர் - நீர்மை: இயல்பு. கார் - கார்ப்பருவம். தெளிவரல்
- தெளிதல். 'கார்.................நினக்கு' என்றது, பழிப்பாள் போன்று
வையையைப் புகழ்ந்தது இனி 'கனைக்கு மதிர்குரல்' என்பது தொடங்கி
மேலே தைந்நீராடல் கூறுகின்றாள்.

      வையை: அண்மைவிளி. கார்வானம் கனைக்கும் அதிர்குரல் நீங்க
என மாறுக. வானம்: ஆகுபெயர்: முகில். பைதல் - குளிர் விதலை -
நடுக்கம். முன்பனிப்பருவத்தே ஞாயிற்றின் வெயில் சுடுதலின்றாகலின்
'ஞாயிறு காயா மாரி' என்றார். நளி - குளிர்ச்சி: நளி பின்மாரி என
மாறிக் கூட்டுக. குளம் - மார்கழித்திங்கள். திங்கள் வளருந்தொறும்
மறுவும் வளர்தலின் 'திங்கள் மறுநிறை ஆதிரை' என்றார்.
மாயிருந்திங்கள்-மிகப்பெரிய திங்கள்: முழுமதி என்றவாறு.
ஆதிரை-திருவாதிரைநாள். விரிநூல் அந்தணர் என்றது அறவோரை.
புரிநூல் அந்தணர் என்றது பார்ப்பனரை.

      பொலங்கலம் - பொற்கலம். இறைவனுக்குப் பலிப்பொருள் பெய்த
பொற்கலம் என்க. எடுத்த மொழியின் இனஞ்செப்பிப் பொற்கல முதலிய
பூசனைப் பொருள்களை ஏந்தி என்க.

      (பரிமே.) 76. திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன்
*பூத்தடத்தின்கண் (பூத்தடம்-புனர்பூசம்) நிற்குமாதலின் அதனையுடைய
மார்கழிமாதம் குளம் எனப்பட்டது.


(பாடம்.) * பூராடத்தின்கண்.