|   
       10 - 17: நாண்மலர் . . . . . . . . குன்று  
       
       
            (இ-ள்.) கொன்றை நாள் மலரும். பொலம் தார் போன்றன 
      -  
      கொன்றையின் புதுமலர் தாமும் பொன்மாலை போன்று மலர்ந்தன,  
      அழுகை மகளிர்க்கு உழுவை செப்பமெல் இணர் வேங்கை வியல்  
      அறை தாயின - அழாநின்ற சிறுமிகளுக்கு அவ் வழுகை  
      தீர்தற்பொருட்டுத் தாயர் அதோ புலிபுலி என்று சுட்டிச் சொல்லும்படி  
      மெல்லிய பூங்கொத்துக்களையுடைய வேங்கையின் மலர் அகன்ற  
      பாறைக்கல்லின் மேல் உதிர்ந்து பரவாநிற்க, நீர் அயல் கலித்த  
      நெரிமுகை காந்தள் வார்குலை அவிழ்ந்த வள்நிறை இதழ்தொறும் -  
      இவற்றோடு நீர்நிலையின் பக்கத்தே தழைத்த நெரிப்புடைய  
      அரும்புகளையுடைய காந்தளின் நெடிய பூங்கொத்துக்கள் மலர்ந்த  
      ஒழுங்குபட்ட இதழ்கள்தோறும், தோன்றி விடு கொடிப்பிறந்த மெல்தகை 
      - தோன்றியினது கொழுந்துவிட்டுப் படர்ந்த கொடியின்கண் தோன்றிய  
      மெல்லிய அழகுடைய, பவழத்து அன்ன செம்பூ தாஅய் - பவழம்போன்ற 
      செந்நிறமுடைய மலர் பரக்க, நின் குன்று கார் மலிந்தன்று - பெருமானே; 
      நினது திருப்பரங்குன்றம் கார்காலத்துத்தன்மை மிக்கது;  
       
            (வி-ம்.) பெருமானே! நின்குன்று கார்ப்பருவம் அல்லாத 
      வேனிற் 
      பருவத்தும் முகில் மழையை மிகப் பெய்தலானே சுனைப்பூ மலர்ந்தும்,  
      வண்டுகள் இசைபாடியும் மூங்கில்கள் தோள்போன்று தழைத்தும், மயில்  
      அகவா நிற்பவும் கொன்றை காந்தள் தோன்றி என்னும் இவையும் பூத்துப் 
      பொலிதலானே கார்ப்பருவத்தின் தன்மை பெற்றது என்க.  
       
            கார் மலிந்தன்று என்றது, அது கார்ப்பருவம் அன்மை 
       
      குறித்தவாறு. இங்ஙனம் முருகனுடைய திருப்பரங்குன்றத்தின் வளங்  
      கூறுமாற்றான் தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவினைக் குறிப்பான்  
      உணர்த்தி, இப் பருவத்தே மயில்கள் முதலியன அகவுதல் கேட்டும் நின்  
      தலைவர் நீட்டித்திரார்; இஃது அப் பருவத் தொடக்கமே யாதலின், நின் 
      தலைவர் விரைந்து வருவர்; நீ ஆற்றியிரு எனக் குறிப்பான் உணர்த்தி,  
      ஆற்றுவிக்கும் நுணுக்கம் உணர்க.  
       
            பாறைக்கல்லின்மேல் வேங்கைப்பூ உதிர்ந்துகிடத்தல் 
      புலிபோன்று  
      தோன்றும்; ஆதலால். மகளிரின் அழுகையை அச்சுறுத்தித் தீர்க்கக்  
      கருதிய தாயர் அக் கல்லினைக் காட்டி, 'அதோ புலிபுலி' என்று  
      அச்சுறுத்தும்படி என்க.  
       
            வேங்கைப்பூ உதிரப்பட்ட பாறை புலிபோலத் தோன்றும் 
       
      என்பதனை, "கருங்கால் வேங்கை வீயுகு துறுகல், இரும்புலிக்  
      குருளையிற்றோன்றும்" (குறுந். 47) எனவும், "வேங்கை மாத்தகட்டு  
      ஒள்வீதாய துறுகல் இரும்புலி வரிப்புறங் கடுக்கும்" (புறநா - 202) எனவும் 
      பிற சான்றோரும் ஓதுதலானும் உணர்க.   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |