(வி-ம்.) கருடப்புள்ளின்பால் சிவப்பும் வெண்மையும்  
      காணப்படுதலால் பன்னிறப் படர்சிறை என்றார். சிறை - சிறகு. பாப்புப்  
      பகை: அன்மொழித் தொகை; கருடனுக்குப் பெயராய் நின்றது. பாம்பு  
      என்பது வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்றொடர் வன்றொடராயிற்று.  
      கோடாச் செல்வன் என்றது. நடுநிலைமையுடைய திருவருட் செல்வத்தை 
      உடையன் என்றவாறு 'மனக்கோட்ட மில்லது செப்பம்' ஆகலின்  
      அங்ஙனம் கூறினார். செல்வனை - என்புழி ஐகாரம் பகுதிப் பொருளது.  
      ஏவல் - ஓதுதல். முதுமொழி - வேதம். கார் - மேகம். மலர்ப்பூவை:  
      முன்பின் மாறித்தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. நின்  
      அருண்மொழி வலம்புரிமுழக்கத்தையும், வேத முழக்கத்தையும்,  
      செறல்மொழி முகில் முழக்கத்தையும் இடி முழக்கத்தையும் ஒக்கும் என்க.  
      செல் - இடி. அருள்வயின் மொழி செறல்வயின் மொழி என இயைக்க. 
      அருளிடமாகப் பிறக்கும் மொழி; செறல் இடமாகப் பிறக்கும் மொழி  
      என்க.  
       
            (பரிமே.) 38. பகை - கருடன். 36. கோடாமை - சலியாமை. 
       
       
       46 - 56: முடிந்தது . . . . . . . . .வெய்யை  
       
       
            (இ-ள்.) முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் 
       
      கடந்து - பெருமானே நீ தோன்றியதும் இனித் தோன்றுவதும்  
      இப்பொழுது தோன்றாநின்றதுமாகிய அம் மூன்றுகாலக் கூறுபாடுகளையும் 
      கடந்து, அவை அமைந்த கழல் நிழலவை - அக்காலக் கூறுகள் தாம்  
      பொருந்தப்பெற்ற திருவடி நீழலையுடையை, ஏத்துமவை - நின்னை  
      வழிபடும் உயிர்கள், இருமைவினையும் இல - பிறப்பிற்குக் காரணமான  
      இருவகை வினைகளும் இல்லன வாகும். ஒருமை வினைமேவும்  
      உள்ளத்தினை - நீ முத்தொழிலுடையை எனினும் எவ்வாற்றானும்  
      உயிர்களைக் காத்தற் றொழிலாகிய ஒரு தொழிலிடத்தேயே பொருந்திய  
      திருவுள்ளத்தினையுடையை, அடியும் கையும் கண்ணும் வாயும் அடை  
      இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை - நின் திருவடியும்  
      திருக்கைகளும் திருக்கண்களும் திருவாயும் இலைப்பரப்பினின்றும்  
      உயர்ந்து மலர்ந்த பெரிய இதழ்களையுடைய தாமரைப் பூவை  
      ஒப்பனவாம், எருத்தொடு தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்  
      தாளும் தோளும் பெரியவை - பெருமானே நின் பிடரியுடனே தொடியும்  
      திருவுந்தியும் தோளின்கண் அணியும் வாகுவலயமும் திருவடியும்  
      திருத்தோளும் பரியன, மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை- நின்  
      திருமார்பும் பின்புறமும் திருவுள்ளமும் பருமையுடையன, கேள்வியும்  
      அறிவும் அறத்தொடு நுண்ணியை - நின் கேட்டற்பண்பும்  
      அறிவுடைமையும் அறமுடைமையும் மிக நுண்ணியனவாகும், வேள்வியும்  
      மறனும் விருப்பொடு வெய்யை - நீ வேள்வியிடத்தேயும்  
      தீவினையிடத்தேயும் நிரலே விருப்பமுடையவனும் கொடுமையுடையவனும்  
      ஆவாய்;   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |