பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்249

நெடுமுடி வானவனும் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலும் கானலுந்
தோன்றுமால்" (யாப் - வி 78. இ-வி. 738 மேற்.) எனவும் பிற
சான்றோரும் ஓதுதல் உணர்க.

      உரு - நிறம். வேறு வேறு - ஒன்றையொன்று முரணிய. ஒரு
தொழில் - காத்தலாகிய ஒரே தொழில் என்க. மாயோன் -
கருநிறமுடையன்; என்றது கண்ணபெருமானை. தம்முன் - தமையன்;
என்றது நம்பி மூத்த பிரானை (பலதேவன்) எல்லாம் தானேயாகிய
மாயோன் எனக் கூட்டுக. தாங்கும் என்றது தாங்குதலருமைதோன்ற
நின்றது;

"வேதங்கள் அறைகின்ற வுலகெங்கும் விரிந்தனவுன்
பாதங்கள் இவையென்னிற் படிவங்கள் எப்படியோ
ஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ டொன்றொவ்வாப்
பூதங்க டொறுமுறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ"
(விராதன் வதைப் - 48.)
என்றார் கம்பநாடரும்.

      ஓங்கு - புகழானே ஓங்காநின்ற என்க. இருங்குன்றம் -
திருமாலிருஞ் சோலைமலை. (பரிமே.) 12. பிரிவில்லாத சொல்லும்
பொருளும்போல.

15 - 18: நாறிணர் . . . . . . . . சிலம்ப

      (இ-ள்.) வீறு பெறு துறக்கம் - வேறொன்றிற்கில்லாத
சிறப்பினையுடைய மேனிலையுலகத்தின்கண், நாறு இணந்த துழா யோன்
நல்கின் அல்லதை - மணங் கமழாநின்ற பூங்கொத்துக்களையுடைய துளசி
மாலையினை அணிந்த நம்பெருமான் திருவருள் செய்தவிடத்து
ஏறுதலன்றி அருள் செய்யாவிடத்து, ஏறுதல் எளிதோ - உயிர்கள் தம்
முயற்சியானே ஏறுதல் இயல்வதன்றாம், அரிதில் பெறு துறக்கம் எளிதிற்
பெறல் உரிமை - அங்ஙனம் பெறற்கரிய மேனிலையுலகினை எளிதாகப்
பெறுதற்குரிமை நல்கும் சிறப்பினையுடைய, மாலிருங் குன்றம் சிலம்ப
ஏத்துகம் - திருமாலிருங் குன்றத்தினை உலகத்தாரெல்லாரும் கேட்கும்படி
ஏத்தித் தொழக்கடவேம்;

      (வி-ம்.) இறைவனுடைய திருவருள் பெற்றார்க்கன்றித் துறக்கம்
எய்தவியலாது. அவ்விறைவன் திருவருளை எளிதிற் கூட்டுவித்துத்
துறக்கம் எய்துவிக்கும் சிறப்பு இருங்குன்றத்திற்கு உண்டு: ஆதலின்
அதனை ஏத்து மாற்றானே யாம் அவ்வரிதுபெறு துறக்கத்தை எளிதாக
எய்துவோமாக. எல்லோரும் கேட்கும்படி முழங்கி ஏத்துவேம் என்றவாறு.
சிலம்ப - முழங்க. சிலம்ப என்றது, பிறரும் இதனை அறிந்து ஏத்தும்
பொருட்டு என்பதுபடக் குறிப்பேதுவாய் நின்றது. ஏத்துகம்: தன்மைப்
பன்மை.

      இப்பகுதியில் "துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ
வீறுபெறு துறக்கம்" என்பதனோடு,