(வி-ம்.) கூறும்படி நீர்நிறந் தோன்றாது என மேலே சென்று  
      முடியும். ஆடி ஆடி முதலிய அடுக்குகள் பன்மைபற்றி வந்தன.  
      அருளியவர் - கணவன்மார்: சூடி என்ற வினைக்கேற்ப பூ என்பது  
      வருவித்துக் கொள்க. 'சிதை சிதைபூச் சூடி' என்றும் பாடம். 'மழுபொடு  
      நின்ற' என்றும் பாடம். இழுது - சேறு: நெய்யுமாம். விழுதகை நல்லாரும் 
      மைந்தரும் ஆடி என்புழி ஆடி என்னும் செய்தெனெச்சத்தை ஆட எனச் 
      செயவெனெச்சமாக்குக. குணக்கு - குணத்திற்கு: குணக்குச் சான்றீர் -  
      குணத்தானே சான்றீர் என்க: வேற்றுமை மயக்கம். என்று கூறும்படி  
      என்பது இசையெச்சம்.  
       
      84 - 86: சாந்தும் . . . . . . . . வையையாறு  
       
       
            (இ-ள்.) சாந்தும் கமழ்தாரும் கோதையும் சுண்ணமும் 
      - அங்ஙனம் 
      நீராடிய மகளிரும் மைந்தரும் அணிந்திருந்த சந்தனமும் மணங்கமழ்  
      தாரும் கோதையும் நறுமணப் பொடிகளும், கூந்தலும் பித்தையும்  
      சோர்ந்தன - மகளிர் கூந்தலிடத்து நின்றும் மைந்தர்  
      பித்தையிடத்தினின்றும் நழுவி வீழ்ந்தனவாகிய, பூவினும் அல்லால் - 
      மலரும் ஆகிய இவற்றினாலாகிய நிறந் தோன்றுதல் அல்லது,  
      இவ்வையையாறு நீர் நிறம் சிறிதானும் தோன்றாது - இந்த வையைப்  
      பெரியாறு தனது நீரினது நிறம் யாண்டும் ஒரு சிறிதேனும் தோன்றப் 
      பெற்றிலது;  
       
            (வி-ம்.) சாந்து - சந்தனம் குங்குமம் முதலியவற்றின் 
      குழம்பு. தார் 
      - ஆடவர் அணிந்த மாலை; கோதை - மகளிர் அணிந்த மாலை.  
      சுண்ணம் - மணப்பொடி. பித்தை - ஆடவர் தலைமயிர்.  
       
       87 - 89: மழை . . . . . . . . . வையை  
       
       
            (இ-ள்.) வையை - இவ் வையையாறு, மழை நீர் அறு குளத்து 
       
      - மழைநீர் அற்று வற்றிக்கிடக்கும் குளத்தின்கண், வாய்பூசி ஆடும் - 
      ஊர்மாந்தரானே வாய் பூசப்பட்டும் ஆடப்பட்டும் கிடக்கும். கழுநீர  
      மஞ்சனம் குங்குமம் கலங்கல் வழிநீர் - கழுவப்படும் நீர்மையுடைய  
      மஞ்சனப் பொருள்களும் குங்குமக் குழம்பு முதலியனவும் கலந்து  
      கலங்கலாகி வழிந்த நீர்போன்ற நீருடையதல்லது, விழுநீர் அன்று -  
      சிறந்த நன்னீரையுடைத்தன்று.  
       
            (வி-ம்.) வையை வற்றிய குளத்தின்கண் மக்களால் 
      ஆடப்பட்ட  
      நீர்போன்ற நீரையுடைத்தாயிற்றன்றி நன்னீருடைத்தன்று என்க. 'மழைநீர்  
      அறுகுளம்' என்றது மழை வறந்த காலத்தே நீர் வற்றிய குளம் என்றவாறு. 
      அக்காலத்தே ஊர்மக்கள் அனைவரானும் ஆடப்பட்டுக் கலங்கிய அதன் 
      நீர் போன்ற நீரையுடைத்தாயிற்று என்க. குங்குமக் கலங்கல் - குங்குமச் 
      சேறு. மஞ்சனம் - நீராடுதல். நீராடற்குரிய மணப்பொருட்கு ஆகுபெயர். 
      அவை பத்துத் துவரும் ஐந்து விரையும் முப்பத்திருவகை  
      ஓமாலிகையுமாம். 'மழைநீர்க்குளத்து' என்றும் பாடம். 'விழுநீரவன்று'  
      என்றும் பாடம்.  
       
      ப.--26   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |