(பரிமே.) 34 - 5: என்றது உலகுயிர்களின் 
      தோற்றமும்  
      நிலைபேறும் ஒடுக்கமும் நின்கண்ண என்றவாறாம்.  
       
      இவை என்றது நணியவற்றை; உவை என்றது அவற்றிற்  
      சேயவற்றை; அவை என்றது அவற்றினும் சேயவற்றை; பிற என்றது  
      காணப்படாதவற்றை. 
       
       36 - 48: சேவலோங்கு . . . .. . பாம்பு  
       
       
           (இ - ள்.) சேவல் ஓங்கு உயர் கொடியோயே - கருடச் சேவல்  
      எழுதப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியினையுடையோனே!, சேவல் ஓங்கு  
      உயர் கொடி நின் - சேவற் கொடியை உடைய நினது, உயர்கொடி ஒன்று 
      பனை - உயர்ந்த கொடியினுள் ஒன்று பனைக் கொடியாகும். நின் உயர்  
      கொடி ஒன்று நாஞ்சில் - நினது உயர்கொடியினுள் ஒன்று கலப்பைக்  
      கொடி, நின் உயர் கொடி ஒன்று யானை - நின் உயர்கொடியினுள் ஒன்று 
      யானைக் கொடி, நின் ஒன்றா உயர்கொடி ஒன்றின்று - இவ்வாறு  
      நினக்குப் பல கொடிகள் உளவேனும் நினக்கே சிறப்பாக உயர்ந்த 
      கொடியை ஏனைக் கொடி ஒத்தல் இல்லை, எதனால் எனின் அச்சிறப்புக்  
      கொடி, விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் -  
      நஞ்சுடைய பாம்பின் உடலையும் உயிரையும் உண்ணும் கருடனாதலான்,  
      அவன் மடிமேல் வலந்தது பாம்பு - அக் கருடனுடைய வயிற்றின்மேற்  
      கட்டப்பட்ட பட்டிகையும் பாம்பே, தொடி பாம்பு - அவன் கையிலணிந்த 
      தொடியும் பாம்புதான், முடிமேலன பாம்பு - அவன் திருமுடிமேற்  
      சுற்றப்பட்ட கண்ணிகளும் பாம்புகளேயாம், பூண் பாம்பு - மேலும்  
      அவனுடைய அணிகலனெல்லாம் பாம்புகளே, தலைமேலது பாம்பு  
      - அவன் தலையின் மேலே அணியப்படும் சூட்டும் பாம்புதான், சிறை  
      தலையன பாம்பு - அவன் சிறகிடத்து அணியப்படுவனவும்  
      பாம்புகளேயாம், படி மதம் சாய்த்தோய் - பகை வலி கெடுத்தோனே!, 
      பசும்பூணவை- பொன்னிறமுடையோயின், கொடிமேல் இருந்தவன் தாக்கு  
      இரையது பாம்பு - கொடிமேலிருந்த அக்கருடன் எறிந்தெடுக்கும் இரையும் 
      பாம்பே ஆகும்;  
       
           (வி - ம்.) சேவல் - கருடச்சேவல். நின் உயர்கொடிகளுள் ஒன்று  
      பனை; ஒன்று நாஞ்சில்; ஒன்று யானை. இங்ஙனம் பல கொடிகள்  
      உளவேனும் அவை நின் சிறப்புக்கொடியாகிய கருடக்கொடியை ஒவ்வா;  
      எற்றாலெனின் அக் கருடன் பாம்பின் உடலுயிர் உருங்கும் ஆதலால்  
      என்க. ஒன்றாக உயர்கொடி எனற்பாலது ஈறு கெட்டு ஒன்றா என  
      நின்றது. ஒன்றின்று - ஒன்றுதலில்லை என்க; ஒருமைப் பன்மை  
      மயக்கம். இனி நினக்கு ஒன்றாத கொடி ஒன்றில்லை எனக் கூறி  
      அதற்கியைய உரைப்பினுமாம். உவணம் - கருடன் உருங்குதல் -  
      உண்ணுதல். மடி - வயிறு. தொடி - வீரவலயம். வலந்தது -  
      கட்டப்பட்டது. பசும்பூணவை - பொன்னிற முடையோயாகிய நினது என்க. 
      கொடிமேலிருந்தவன் - கருடன்.   | 
  |   
	
				
				 | 
				 
			 
			 |