ஆங்கு, அசை. போதரு, போதரென விகாரமாயிற்று, “தோடே மடலே” என்னும் (1) சூத்திரத்தால் ஓலையென்றார். இதனால், இருவர்க்கும் முன்னர் நகைபிறந்தது; பின்னர்ப் புணர்ச்சி யுவகை பிறந்தது. இதனுள், (2) ‘கோனடிதொட்டேன்’ எனவும் ‘கோயிலுட்கண்டார் நகாமை வேண்டுவல்’ எனவுங் கூறலின், அடியோரென்பது பெறுதும். (3) ‘கொக்குரித் தன்ன’ எனத் தோல்திரைந் தமைகூறலின், இளமை தீர்திறமாகிய பெருந்திணை யாயிற்று, இது “வேட்கைமறுத்து” என்னும் (4) பொருளியற்சூத்திரத்தால் வேட்கைமறுத்துக் கூறியபெருந்திணை. இஃது (5) ஊடற் பகுதியாகலின் மருதத்துக்கோத்தார். இஃது ‘என்னோற்றனைகொல்லோ’ எனவும் ‘ஈங்குருச்சுருங்கி’ எனவும் முட்டடியின்றிக் குறைவுசீர்த்தாகிய சொற்சீரடியும் வந்து, இரண்டடியான் இற்றதோர் கொச்சகமும் ஐஞ்சீரடுக்கிவந்த வெண்பா ஐந்தும் ஐஞ்சீரடியான் வந்த, கொச்சகம் ஒன்றும் இரண்டடிக்கொச்சகம் ஒன்றும் ஆசிரியத்தளை விரவின கொச்சகவெண்பாவும் பெற்று வெண்கலிப்பாவின் வேறுபட்டு வந்த கொச்சகக்கலிப்பா. (29)
1. தொல். மரபி. சூ. 86. இச்சூத்திரத்தின் பேராசிரிய ருரையிலும் ஓலையென்பது அகக்காழல்லாத ஓரறிவுயிராகிய புல்லின் உறுப்பாய் வருதற்கு, “துகடபுகாட்சி யவையத்தா ரோலை” என்பது மேற்கோள். 2. அடியோர் பாங்கினும் தலைமக்களுண்டென்பதற்கு, “நம்முணகுதல் ....................தொட்டேன்” “பேயும் பேயுந்....................வேண்டுவல்” என்னும் பகுதிகளை மேற்கோள்காட்டி, இது பெருந்திணைக்கண் அடியோர் தலைவராக வந்தது; என்னை ? கோனடி தொட்டேனென்றமையானும் கோயிலென்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்களாயிற்று என்றனர் இவ்வுரைகாரர்; தொல். அகத். சூ. 23. 3. “உக்கத்து................சிறிது” என்பது கொக்குரித்தன்னவென்பதனால் தோல் திரைந்தமை கூறலின் இளமை தீர்திறமாகிய பெருந்திணையென்பர், நச்; தொல். அகத். சூ. 51. இந்நூற்பக்கம் 568: 1 - ஆம் குறிப்பும் பார்க்க. 4. தொல். பொருளி. சூ. 17. இச்சூத்திரத்தின் இவருரையிலும், “எறித்த படைபோல்..............னுயிர்” “உழுந்தினுந்.............பிறப்பு” என்பவை அடியோர் தலைவராக வேட்கைமறுத்துணர்த்தியதற்கு மேற்கோள். 5. “உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே” என்னும் தொல். அகத். 13 - ஆம் சூத்திரத்தின் இவருரையிலும், கூனுங் குறளும்....................உறழ்ந்து கூறும் பெருந்திணை ஊடற்பகுதியதாதலின் மருதத்துட் கோத்தாரென்னும் குறிப்பு உள்ளது.
|