பக்கம் எண் :

26கலித்தொகை

கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
(1) யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன

எ - து: நின்போக்கைத் தடுத்தல்கொண்டு, நின்னை உயிராகவுடைய இவள் நீ பிரிவையாயின் உயிர்கொண்டிராளென்று பலவற்றைக் கூறியாங்கள் இரந்துகொள்ளவும், எம்முடைய வார்த்தைகளைக் (2) காரியமென்று கருதாயாயினாய். இனி நின்னைப் போகாமற் றடுப்பன, நின் னெஞ்சைச் செலுத்தின வழியிடத்து, நீர் நீக்கப்பட்ட வறுவிய சுனைகளிடத்து இலைகளோடே 1கூட வாடிய அழகிய மலர்கள்; எ - று.

என்றதனான், இவளேயன்றிச் சுற்றத்தாருங் கெடுவரென்றாள்.

‘‘எந்நில மருங்கிற் பூவும் புள்ளு, மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்’’ (3) என்பதனான் மருதத்துப்பூப் பாலைக்கண் வந்தது.

10. 2வல்லைநீதுறப்பாயேல் வகைவாடு மிவளென
(4) வொல்லாங்கியா 3மிரப்பவுமுணர்ந்தீயா யாயினை
செல்லுநீ ளாற்றிடைச்சேர்ந்தெழுந்த 4மரம்வாடப்
(5)புல்லுவிட்டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன

1. ‘‘அடையென்பது: தாமரை ஆம்பல் நெய்தற்றொடக்கத்து நீர்நிலை ஓரறிவுயிர்கட்கும் தாம்பூலத்திற்கு முரித்து’’ (நன். பொது. சூ. 37.) என்பர் மயிலைநாதர்; சிறுபான்மை வேறு ஓரறிவுயிர்க்கும்வரும்.

2. காரியம் - செய்யத்தக்கது.

3. தொல். அகத். சூ. 19. (அ) இதில் இச்செய்திக்கே நச்சினார்க்கினியரும் (ஆ) காமநிலை யுரைத்த லென்பதற்கு நீ பிரியின் இவள் காமமிகுமென்று கூறுத லென்று பொருள்கூறி, (தொல். கற். சூ. 32. “காமநிலை”) அதற்கு இளம் பூரணரும் ‘‘உடையிவ ளுயிர்வாழாள்......அணிமலர் தகைப்பன’’ என்னும் பகுதியை மேற்கோள் காட்டினர்.

4. ‘ஒல்லாங்கு’ என்பதில் ஆங்கென்பதன் பொருளை (அ) ‘‘பட்டாங்கு கூறல்’’ (ஆ) ‘‘நின்றாங்கிசைத்தல்’’
(இ) ‘‘வல்லாங்குப்பாடி’’ (ஈ) ‘‘வல்லாங்கு வாழ்தும்’’ (உ) ‘‘வாழ்வாங்கு வாழ்பவன்’’ (ஊ) ‘‘கற்றாங் கெரியோம்பி’’ என்பவற்றோடு சேர்த்து ஆராய்க.

5. ‘‘புல்லுவிட்டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பனவென்றாற்போல்வன தலைவி கூற்றாய் வருவன உளவாயின் இதன்கண் (தலைவன் எடுத்துக்கொண்ட காரியத்திற்கு ‘முடித்தலாற்றான் கொல்’ என்று அஞ்சும் அச்சத்தின்கண்) அடக்குக’’ என்பர், நச்; தொல். கற். சூ. 7.

(பிரதிபேதம்) 1 கூடி, 2 வல்லையிற், 3 உரைப்பவும், 4 வாய்வாட.