(1) துள்ளுநர்க் காண்மார் தொடர்ந் (2) துயிர் வௌவலிற் (3) புள்ளும் வழங்காப் (4) புலம்புகொ ளாரிடை (5) வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்ப தறிந்தன ளென்றோழி எ - து: சுற்றுதலமைந்த வில்லினையுமுடையராய்க் கடைகுழன்ற வளர்ந்த மயிரினையும் உடையராய்ப் பிறர்க்குக் குற்றஞ் செய்தலைப் பார்த்திருக்கும் மெய்வலியுடைத்தாகிய வலியினையும் (6) வற்கென்ற உடம்பினையும் புலிபோலும் பார்வையினையுமுடைய தறுகண்மையையுடைய மறவர், தாம் (7) வம்பலர் பக்கற் பெறுவதொரு பொருளினையுடைய ரல்லராயினுந் தங்களம்புபட்டுப் பதைப்பாரைக்கண்டு மனமகிழ்வதற்குத் தொடர்ந்து சென்று உயிரைக்கொள்ளுகையினாலே பறவைகளும் பறத்தலைச் செய்யாத வருத்தத்தைக்கொண்ட, தொலையாத வழியை வெள்ளிய வேலை வலக்கையிலே ஏந்திப் பொருளைத் தேடிக்கொண்டு வருதலின் மேலுள்ள விருப்பத்தினாலே நினைந்தீரென்று தனக்கு வெளியாகச்சொல்லுகின்ற நும்முடைய செயலை என் தோழி அறிந்தாள்; எ - று.
1. ‘‘அறுமுக வொருவனோர் பெறுமுறை யின்றியு, மிறுமுறைகாணுமியல்பினி னன்றே, யஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச், செங்கடை மழைக்க ணிரண்டா வீத்தது’’ என்புழி முருகவேள், தனக்குப் பெறுங்கூறு வேறொன்றுமில்லையாகவும் யான்இறந்துபடு முறைமையைத் தன்கண்ணாற் காணவேண்டுங் காரணத்தால் இவ்வாறு செய்தானென்னும் பொருணோக்கிற்கு, ‘துள்ளுநர்க்காண்மார்’ என்பதை மேற்கோள் காட்டினர், அடியார்க்கு. சில. 2: 49-52. 2. (அ) ‘‘செங்கோல் வாளிக் கொடுவி லாடவர், வம்பமாக்க ளுயிர்த்திறம் பெயர்த்தென, வெங்கடற் றடைமுதற் படுமுடை தழீஇ, யுறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது, மாறுபுறக் கொடுக்கு மத்தம்.’’ நற். 164. (ஆ) “யாவரும், வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச், சுரம்புல் லென்ற வாற்ற’’ அகம். 1 : 13-5. 3. ‘‘புள்ளும் வழங்கா வழி’’ தஞ்சை. 402. 4. ‘‘புலம்பு வீற்றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்’’ அகம். 335. 5. (அ) ‘‘வெள்வேல்வலத்திர்....னுள்ளினிர்’’ என்பது முன்னிலைப்பன்மை வினைக்குறிப்பு முற்று வினையெச்சக் குறிப்பாயினதற்கு மேற்கோள். நன். வினை. சூ. 32. மயிலை. வி. இராமா. இ-வி. சூ. 250. (ஆ) ‘‘வெள்வேல் வலத்திர்’’ என்பது வினையெச்ச முன்னிலை வினைக்குறிப்பு முற்றுக்கு மேற்கோள் தொல். எச்ச. சூ. 61. 6. வற்கென்றல் - வலிமையுறல்; ‘‘வற்கென்ற நெஞ்சம்’’ பு - வெ என்பதனுரை பார்க்க. 7. ‘‘நகையொன்றே நன்பயனாக் கொள்வான்-பயமின்று, மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற், கைவிதிர்த் தஞ்சப்படும்’’ நீதிநெறி. 73.
|