| தேறல் - யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலை; பொன் செய் புனை கலத் தேந்தி - பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின்கண்ணே யேந்தி; நாளும் ஒண்டோடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து இனிது ஒழுகு மதி - நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்குஇனிதாக நடப்பாயாக; ஓங்கு வாள் மாற - வென்றியான் உயர்ந்த வாளையுடைய மாற; அங்கண் விசும்பின் - அழகிய இடத்தையுடைய வானத்தின்கண்ணே; ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் - நிறைந்த இருளைப் போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றை - யொப்பவும்; குட திசைத் தண்கதிர் மதியம் போலவும் -மேலைத் திக்கிற் றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப் போலவும்; உலகமோ டுடன் நின்று நிலைஇயர் இவ்வுலகத்தோடு கூட நின்று நிலைபெறுவாயாக எ-று.
பிணிமுகம் பிள்ளையா ரேறும் யானை யென்றும் சொல்லுப. கால முனபென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்தபொழுதே முடிவு காலத்தைச் செய்யும் வலியை மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற் றொழிலை யுடைமையான். வாலியோ னென்றது நம்பி மூத்தபிரானை. இகழுந ரடுநன் என்றது, மாயோனை. ஆரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் என்றது, எழுகின்ற ஞாயிற்றை. மதி, இளம் பிறை. இது தேவரோடுவமித்தமையாற் பூவைநிலை யாயிற்று.
விளக்கம்: மணி யெனப் பொதுப்படக் கூறியவழிச் சிறப்புடைய நீல மணியே கொள்ளப்படுமாகலின், மணி மிடற்றோன் திருமணி மணிமயில் என்புழி யெல்லாம் நீலமணி யென்றே உரை கூறினார். வெம் நாஞ்சில் என்றவிடத்து, வெம்மை வேண்டற்பொருட் டாதலால், அடல் வெம் நாஞ்சில் என்றதற்குக் கொலையை விரும்பும் நாஞ்சில் என்றார். மணி மிடற்றோன் முதலிய நால்வரும் தெய்வமாதலின் அவர்க்கேற்ப, கால முன்பு என்பதற்கு முடிவு காலத்தைச் செய்யும் வலி யென்றார். கால முன்ப (புறம்:23) என்றவிடத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் குறிக்கப்படுதலின், அவற்கேற்பக் காலன் போலும் வலியுடையோய் என்று உரை கூறினார். தான் கருதியதைக் கருதியவாறே முடிக்கும் பேராற்றல் முருகற் குண்டு; முருகன் திருவடி கருவோர்க்கே இவ் வுண்மை யுண்டாமென நக்கீரர் இன்னே பெறுதிநீ முன்னிய வினையே என்பர். மேனாட்டுக் கிரேக்கரும் உரோமரும் தம்மை அயோனியர் என்ப; அது யவனர் எனத் திரிந்தது. ஓங்கு வாள் மாற என்ற விடத்து, ஓங்குதற்குக் காரணம் இது வென்பார், வென்றியான் உயர்ந்த வாள் என்றார். ஞாயிறு இருளகற்றலாலும் திங்கட்பிறை தொழப்படலாலும் உவமமாயின.
|