பக்கம் எண் :

153

புகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்து; இளைய
தாயினும் - தான் சிறிதே யாயினும்; கிளை அரா எறியும் - கிளையுடனே
பாம்பை யெறியும்; அரு நரை உருமின் - பொறுத்தற்கரிய வெள்ளிய
உருமேறு போல; பொருநரைப் பொறாஅ - இளமைக் காலத்தும்
பகைவர்க் காணப் பொறாத; செரு மாண் பஞ்சவர் ஏறு - போரின்கண்
மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறு போல்வான்; நீயே அறம்
துஞ்சு உறந்தைப் பொருநனை - நீ அறம் தங்கும் உறையூரின்கண்
அரசன்; இவனே - இவன்; நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய -
நெல்லும் நீரும் யாவர்க்கும் எளிய வெனக் கருதி; வரைய சாந்தமும் -
அவை போலாது யாவர்க்கும் பெறுதற்கரிய பொதியின்மலையிடத்துச்
சந்தனமும்; திரைய முத்தமும் - கடலிடத்து முத்துமென இவற்றை; இமிழ்
குரல் முரசம் மூன்றுடன் ஆளும் - ஒலிக்கும் குரலையுடைய முரசம்
மூன்றுடனே யாளும்; தமிழ் கெழு கூடல் தண் கெழு வேந்து - தமிழ்
பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; பால்
நிற உருவின் பனைக் கொடி யோனும் - பால்போலும் நிறத்தையுடைய
பனைக் கொடியை யுடையோனும்; நீல் நிற வுருவின் நேமியோனும் என்று
- நீல நிறம்போலும் திருமேனியையுடைய ஆழியை யுடையோனு மென்று
சொல்லப்படும்; இரு பெருந் தெய்வமும் உடனின்றாங்கு - இரண்டு
பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல; உருகெழு தோற்றமொடு -
உட்குப் பொருந்திய காட்சியோடு; உட்கு வர விளங்கி - அச்சம் வர
விளங்கி; இன்னீ ராகலின் - நீர் இத்தன்மையிராகுதலின்; இனியவும்
உளவோ - இதனினும் இனிய பொருள் உளவோ; இன்னும் கேண்மின் -
இன்னமும் கேளீர்; நும் இசை வாழிய - நும்முடைய புகழ் நெடுங்காலம்
செல்வதாக; ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் - நும்முள் ஒருவீர் ஒருவீர்க்
குதவுவீராக; இருவிரும் உடனிலை திரியீ ராயின் - நீங்க ளிருவீரும் கூடி
நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின்; இமிழ் திரைப் பௌவம் உடுத்த
இப் பயங்கெழு மாநிலம் - ஒலிக்கும் திரையையுடைய கடல் சூழ்ந்த இப்
பயன் பொருந்திய உலகங்கள்; கையகப் படுவது பொய்யாகாது -
கையகத்தே யகப்படுதல் பொய்யாகாது; அனால் - ஆதலால்; நல்ல
போலவும் - நல்லன போலே யிருக்கவும்; நயவ போலவும் - நியாயத்தை
யுடையன போலே யிருக்கவும்; தொல்லோர் சென்ற நெறிய போலவும் -
பழையோ ரொழுகிய ஒழுக்க முடையனபோலே யிருக்கவும்; காதல்
நெஞ்சின் - அன்பு பொருந்திய நெஞ்சையுடைய; நும் இடை புகற்கு
அலமரும் ஏதில் மாக்கள் - நும்மிடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு