| 67. கோப்பெருஞ் சோழன் இப் பெருஞ் சோழன் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த பெருவேந்தன்; சிறந்த புலவன். இவன் ஆட்சிக்காலத்தே, இவனுடைய மக்கள் இவற்கு மாறாக வெழுந்து போருடற்றக் கருத, அவரைச் செகுத்தற்கு இவனும் போர்க்கெழுந்தான்; ஆயினும், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய சான்றோர் விலக்க விலக்குண்டு அமைந்தான். அம் மானம் பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான். இவனுக்குப் பிசிராந்தையார், பொத்தியார் முதலிய சான்றோர் உயிர்த் தோழர். நட்புக்குரிய காரணங்களான புணர்ச்சி பழகுதல், உணர்ச்சி என்ற மூன்றனுள், உணர்ச்சி காரணமாகப் பிறக்கும் நட்புக்கு இவற்கும் பிசிராந்தையாருக்கும் உளதாய நட்பினைச் சான்றோர் எடுத்துக் காட்டுவர். இவன் வடக்கிருந்த காலத்தில், அவ்வாறே தாமும் இருந்து உயிர்நீத்தற்குப் போந்த பொத்தியாரை விலக்கி, நின் மனைவி கருவுயிர்த்தபின் வருக என இச்சோழன் பணித்தான். அவ்வாறு அவர் வருதற்குள் இவன் உயிர் துறந்து நடு கல் லாயினன். பின்னர் அவர் வந்தபோது நடுகல்லாகிய தான் அவற்கு இடமளித்தான். இவன் தானே அவ்வப்போது பாடிய பாட்டுக்களும் உள. அவை உயர்ந்த கருத்தும், சிறந்த இலக்கிய நலமும் உடையன. இப்பாட்டின்கண் ஆசிரியர் பிசிராந்தையார், அன்னச் சேவலுக்குக் கூறுவாராய்க் கோப்பெருஞ் சோழன் தன்பால் கொண்டிருக்கும் அன்பினையும் நன்மதிப்பையும் எடுத்தோதிக் காட்டுமுகத்தால் உண்மை யன்பு கலந்த நண்பர் மனப் பாங்கினை வெளிப்படுக்கின்றார்.
பிசிர் என்பது பாண்டிநாட்டிலிருந்ததோ ரூர். ஆந்தையார் என்பது இச் சான்றோரது பெயர். இவர் காலத்தே, பாண்டிநாட்டை அறிவுடை நம்பி யென்பான் ஆண்டுவந்தான். அவன் தன்னாட்டு மக்கள் பால் இறை பெறுந்திறத்தில் முறைபிறழும் நிலையி லிருப்ப, அதனை யறிந்த பிசிராந்தையார், தம்மூர்ச் சான்றோர் தம்மை விடுப்ப வேந்தன் பாற் சென்று, அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடியாத்து நாடு பெரிது நந்தும் என்று தெருட்டி நெறிப்படுத்தினார். பின்பு, கோப்பெருஞ் சோழனது செம்மையும் புலமையும் கேள்வியுற்று, அவன்பால் பேரன்பு பூண்டார்; சோழனும் இவர்பால் மெய்யன்பு கொண்டான். உணர்ச்சி யொருமையால் ஒருவரை யொருவர் அறியாமே பிறந்த நட்பு முடிவில் ஒருவரை யொருவர் இன்றியமையா நிலையினைப் பயந்தது. கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து நடுகல்லாகிய பின்பு இவர் சென்று கண்டு தாமும் உயிர்நீத்தார். அந் நிகழ்ச்சிக் குறிப்புக்கள் இத் தொகைநூற்கண் காணப்படும்.
| அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் | 5 | மையன் மாலையாங் கையறு பினையக் | | குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது |
|