| சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.
உரை: குழவி இறப்பினும் - பிள்ளை யிறந்து பிறப்பினும்; ஊன் தடி பிறப்பினும் - தசைத் தடியாகிய மணை பிறப்பினும்; ஆள் அன்றென்று வாளின் தப்பார் - அவற்றையும் ஆளல்ல வென்று கருதாது வாளோக்குதலில் தவறார் அரசராயிருக்க; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய - பகைவர் வாளாற் படாது சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போலப் பிணித்துத் துன்பத்தைச் செய்து இருத்திய; கேளல் கேளிர் வேளாண் சிறு பதம் - கேளல்லாத கேளிருடைய உபகாரத்தான் வந்த தண்ணீரை; மதுகை யின்றி - இரந்துண்ணக் கடவேமல்லே மென்னும் மனவலி யின்றி; வயிற்றுத் தீத் தணிய - வயிற்றின்கண் தீயை யாற்றவேண்டி; தாம் இரந்துண்ணும் அளவை - தாமே இரந்துண்ணும் அளவினை உடையாரை; ஈன்மரோ இவ் வுலகத் தான் - அவ்வரசர் பெறுவார்களோ இவ்வுலகத்தின்கண் எ-று.
அளவை யுடையாரை அளவை யென்றார். இதன் கருத்து, சாக்குழவியும் ஊன் பிண்டமுமென இவற்றின் மாத்திரையும் பெற்றிலே மெனப் பிறர்மேல் வைத்துக் கூறியவாறு. கேளல் கேளி ரென்றது, சிறைக் கோட்டங் காவலரை. அன்றி, இவன் ஆண்மையுடையனல்ல னென்று வாளாற் கொல்லாராய்த் தொடர்ப்படு ஞமலி போல இடர்ப்படுத் திருத்திய கேளல் கேளிர் வேளாண் சிறுபதத்தை மதுகையின்றி வயிற்றுத் தீத்தணிக்க வேண்டித் தாம் இரந்துண்ணு மளவாகக் குழவிசெத்துப் பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும் இவ்வுலகத்து மகப்பெறுவாருளரோ வென வுரைப்பினு மமையும். அரசர்க்கு மானத்தின் மிக்கஅறனும் பொருளும் இன்பமும் மில்லை யென்று கூறினமையின், இது முதுமொழிக் காஞ்சி யாயிற்று.
விளக்கம்: நோற்றோர் மன்ற தாம் கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் (அகம்.61) என்ற கருத்துடையராதலின், பண்டைத் தமிழ் வேந்தர், குழவி யிறப்பினும் உறுப்பில் பிண்டம் பிறப்பினும், மூத்து விளியினும், நோயுற்றிறப்பினும், வாளாற் போழ்ந்து அடக்கம் செய்யும் மரபினரா யிருந்தனர். வாளோக்குதல் - வாளை யோச்சி வெட்டுதல். கேளல் கேளிர் - பகைவர். உண்ணீரைச் சிறுபதம் என்றார்; உணவாய் உண்ணப் படுதல் பற்றி மதுகை, வலி; ஈண்டு மனவன்மை குறித்துநின்றது. மானத்தின் மிக்க அறமும் பொருளும் இன்பமு மில்லை யெனக் கருதுதற் கேதுவாகிய மனத்திட்பம். வயிற்றுத் தீ - பசி நோய் தொடர்ப்படு ஞமலியின் என்றதற் கேற்பத் தொடர்ப்படுத்து என வருவித்துக்கொள்கின்றனர். சிறைப்படுத்திய செயலை, ஞமலியின் தொடர்ப்படுத் திடர்ப்படுத் திரீஇய என்றார். குறிப்பறிந்து நல்கப் பெறாது வாய் திறந்து கேட்டுப் பெறுதலின் இரந்துண்ணும் அளவை யென மானமுடைமையின் மாண்பு தோன்றக் கூறுகின்றான்.
|