| உள்ளஞ்சிறியோன் பெறின்; அது சிறந்தன்று மன் - அத்தாயம் அவனுக்குப் பரிக்க வொண்ணாதாம் படி கனத்தது மிகவும்; மண்டமர் பரிக்கும் மதனுடை நோன்றாள் - அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியை யுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய; விழுமியோன் பெறுகுவ னாயின் - சீரியோன் பெறுவனாயின்; ஆழ் நீர் அறு கய மருங்கில் - தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்து; சிறு கோல் வெண் கிடை - சிறிய தண்டாகிய வெளி கிடேச்சினது; என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்து - கோடைக் கண் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும் நொய்து; மையற்று - குற்றமற்று; விசும்புற ஓங்கிய வெண் குடை - விண்ணின் கண்ணே பொருந்த வுயர்ந்த வெண் குடையினையும்; முரசு கெழு வேந்தர் அரசு கெழு திரு- முரசினையுடைய அரசரது அரசாட்சியைப் பொருந்திய செல்வம் எ-று.
குடிபுர விரக்கு மென்பது குடிமக்களைக் கொள்ளுங் கடமையன்றி மிகத் தரவேண்டு மென்று இரத்தலை. தாயம் சிறியோன் பெறின், அது மிகவும் சிறந்ததன்று; வேந்தர் அரசு கெழு திரு விழுமியோன் பெறுகுவனாயின் நன்றும் நொய்தா லெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன், ஆக்கத்தின்கண் வந்தது. அம்ம: அசைநிலை.
விளக்கம்: தந்தை மூத்துக் கழிந்தவழி அவன்வழித் தோன்றும் அரசு முறையெனும் தாய முறையை ஈண்டுப் பழவிறல் தாயம் என்றும், மூத்தோர் இறந்த பின்னே வரும் உரிமையுடைத் தென்றற்கு மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென என்றும் கூறினான். உரிய கடமையைக் குடிமக்கள் தாமே நல்குவராதலின், கையிகந்த கடமை வாங்கும் வேந்தன் செயலைக் குடிபுரவு இரக்கும் சிறியோன் என்றான். குடி புரவு - குடிமக்களைப் புரத்தற் பொருட்டுப் பெறும் கடமை. மிக்க ஆண்மையே வேந்தற்கு வேண்டப் படுதலின், அஃதில்லாதானைக் கூரிலாண்மைச் சிறியோன் என்றான். மதன் - மன வெழுச்சி. கிடை - கிடேச்சு; அஃதாவது நெட்டி. என்றூழ் - வெயில். சிறந்தன்று - மிகுதிப் பொருட்டாய், கனம் மிகுந்தது என நின்றது. மன் னென்றது ஆகும் என ஆக்கப் பொருள் தருதலின், ஆக்கம் என்றார்.
|