| தேனுமாகக் கொள்க. வான்கணற்று அணிமலையே யென்று பாடமோதுவாருமுளர். வான்கணற் றென்றது மலையினோக்கமும் பரப்பும். மீன்கணற்றென்றது, சுனையினது பன்மையும், தெளிவும் சிறுமையும் ஈண்டுக் கண்ணென்ப தசைநிலை. தாளென்றது, படையறுத்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின வியற்றலும். விறலிய ரென்றது, அவர் உரிமை மகளிரை.
விளக்கம்: நாட்பட்ட தேன் நிறம் மாறியது கண்டு தேன் ஓரி பாய்ந்து விட்டதென இக்காலத்தும் குறவர் வழங்குகின்றனர். சொரிதல் தேனுக்குரிய வினையாயினும் குன்றம் தேன் சொரியுமெனக் குன்றத்துக் குரித்தாய் நிற்பதுபற்றி, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்றதென்றார். தாளிற் கொள்ளலாவது படை வலி யழித்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின இயற்றிக் கோடலும் ஆகிய செயல்களால் வென்று கொள்ளுதல். உரிமை மகளிர் விறலியராக, வேந்தர் பரிசிலராக வரின், பாரி நாடும் குன்றும் ஒருங்கேயீயும் என்றார். அவ்வாறு செய்ய அவர் மனங் கொள்ளார் என்று கருதிச் செலின்என்றார். யான் அறிகுவன் அது கொள்ளுமாறுஎன்றது, நீவிர் கொள்ளும் திறம் அறியாது களிறும் தேரும் முதலாயின கொண்டு போருடற்றக் கருதினீர்; அச் செயல் நுமக்குப் பயன் தாராது என்பது பட நின்றது. யானறிகுவன் என்புழி அன்னீறு தன்மைக்கண் வந்தது. வீழ்க்கும் - நிலத்திற்குள்ளே ஆழச் சென்றிருக்கும். கீழ் நோக்கிச் செல்வது பற்றி வீழ்க்கும்என்றார்; வீழ்ந்து வீழ் என்பனவும் இக்குறிப்பே யுடையவாதல் காண்க.
110. வேள் பாரி
தமிழ் வேந்தர் மூவரும் பாரியின் பறம்பைத் தம் பெரும்படையுடன் போந்து முற்றிக்கொண்ட காலையில், கபிலர், அவர்க்குப் பாரியின் போராண்மையும் கை வண்மையும் எடுத்தோதுவாராய், நீவிர் மூவிரும் கூடிச் சூழ்ந்தாலும் பாரியை வென்று அவன் பறம்பினைக் கைக்கொள்வது முடியாது; பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது; அம்முந்நூறூர்களையும்பரிசிலர் அவனைப் பாடித் தமக்குரிமை செய்துகொண்டனர். இனி அவனும் யாமுமே யுள்ளோம்; நீவிரும் அவர்போலப் பாடி வருவீராயின், எம்மையும் பெறலாம்; எஞ்சி நிற்கும் இப்பறம்பு மலையினையும் பெறலாம்என்று கூறுகின்றார்.
| கடந்தடு தானை மூவிருங் கூடி உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் | 5 | யாமும் பாரியு முளமே | | குன்று முண்டுநீர் பாடினிர் செலினே. (110) |
திணையுந் துறையு மவை. மூவேந்தரும் பறம்பு முற்றிருந்தாரை அவர் பாடியது.
உரை; கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனி ராயினும் - வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் படையினையுடைய |